Skip to main content

உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி- மக்களுக்கு கறிவிருந்து வைத்து அசத்திய வேட்பாளர்!

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் தான் போட்டியிட்ட பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு கறி விருந்து கொடுத்து அசத்தியுள்ளார்.


கடலூர் அருகே உள்ளது பரங்கிப்பேட்டை ஒன்றியம். சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இந்த ஒன்றியத்தில் 25- வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த பரங்கிப்பேட்டை திமுக ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள் என்பவர் போட்டியிட்டார். இவருடன் அதிமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

 Failure in local elections non veg candidate provide to peoples

தேர்தல் முடிவின் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற, திமுக வேட்பாளர் தோல்வியைத் தழுவினார். திமுக வேட்பாளர் முத்து பெருமாள் சுமார் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும், சோர்வடைந்து விடாமல் அடுத்த நாளே துரிதமாக கட்சிப் பணியைத் துவக்கினார்.

இந்நிலையில் முத்து பெருமாள் தான் போட்டியிட்ட பரங்கிப்பேட்டை ஒன்றியம் பெரியப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாண்டிக்குழி கிராமத்தில் ஊர் விருந்து என்ற பெயரில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து பிரியாணியுடன் கூடிய கறி விருந்தைப் பரிமாறினார்.

இந்நிகழ்ச்சியில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பிரியாணியுடன் கூடிய கறி விருந்தில் பங்கேற்று உணவு உண்டனர். இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறிய முத்து பெருமாள், தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை சரிவர சந்திக்க முடியவில்லை. அதனால் தேர்தலுக்குப் பிறகு அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தேன். ஊர் மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு கட்சிப் பணியாக கட்சிக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்த்ததாகவும், அவர்களுக்கு ஊர் விருந்து என்ற பெயரில் விருந்து வைத்து பிரியாணி பரிமாறி மகிழ்ச்சி அடைந்ததாகவும் நெகிழ்ச்சியுடன் கூறிய முத்து. பெருமாள், இதுபோல் இந்த ஒன்றியத்தில் ஒவ்வொரு ஊரிலும் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
 

 

சார்ந்த செய்திகள்