கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 3 பேர் செயற்கை சுவாச சிகிச்சையிலிருந்து மீண்டு நலம் பெற்றுள்ளனர். மேலும் 18 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலும், 14 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் உள்ளனர். கண் பாதிப்பு ஏற்பட்டவர்களை கண்காணிக்கத் தனி மருத்துவக்குழு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாதேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கள்ளச்சாராயத்தில் கலக்கப்பட்ட மெத்தனால் விநியோகித்ததாகக் கூறப்படுகிறது. மாதேஷிடம் இருந்து மெத்தனால் வாங்கிய சின்னத்துரை அதனை கோவிந்த ராஜுக்கு விற்பனை செய்துள்ளார். அதே சமயம் இந்தக் கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் தொடர்புடைய ஜோசஃப் ராஜா என்பவரும் கைது செய்யபட்டுள்ளார். புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மூலப்பொருட்களை ஜோசப் ராஜா வாங்கி விநியோகம் செய்பவர் என போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட ஜோசப் ராஜா அளிக்கும் தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் மேலும் பலர் கைதாக வாய்ப்பு உள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.