கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி நேற்று முன்தினம் மாணவியின் உடல் மறு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. மாணவியின் பெற்றோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வரவில்லை என்று சொல்லப்பட்ட நிலையிலேயே உடற்கூராய்வு முடிந்தது. மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டதால் மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மறுபுறம் இந்த உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக அந்த தனியார் பள்ளியில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 17 ஆம் தேதி நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக விசாரிக்க சிறப்புப் புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேலம் டிஐஜி பிரவீன்குமார் அபிநபு தலைமையிலான அதிகாரிகள் பள்ளியின் மேல் ட்ரோனை பறக்கவிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் சம்பந்தப்பட்ட பள்ளியில் வன்முறையின் பொழுது சேர், டேபிள் உள்ளிட்ட பள்ளி உடைமைகளை சிலர் எடுத்துச்சென்றதாக புகார்கள் எழுந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுத்த பொருட்களை ஒப்படைக்க தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.