கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ள சக்தி மெட்ரீக்குலேஷன் பள்ளி மாணவி கடந்த 13ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட்டது. அதனைத் தொடர்ந்து மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மாணவியின் பெற்றோரும், உறவினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு மாணவியின் மரணம் தொடர்பாக போராட்டம் பெரும் அளவில் வெடித்து, வன்முறையாக மாறி பள்ளிக்கட்டடம், வாகனம், போலீஸ் வாகனம் ஆகியவற்றுக்கு தீவைக்கப்பட்டது. அதேபோல், காவல்துறையினர் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அதன்பிறகு வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவியின் உடலை மறுகூராய்வு செய்ய உத்தரவிட்டது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதேசமயம், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவியின் மறு உடற்கூராய்வு நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றம் மாணவியின் உடலை இன்று(23ம் தேதி) பெற்றோர் பெற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. அதேபோல், இன்று காலை 11 மணிக்குள்ளாக மாணவியின் உடலை அடக்கம் செய்யவும் உத்தரவிட்டது.
அதன்படி, இன்று காலை 7 மணி அளவில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, மத்திய மண்டல ஜஜி சந்தோஷ்குமார் முன்னிலையில் மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுக்கொண்டனர். அரசு மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் சி.வி.கணேசன் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன்குமார், எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் ஆகியோரும் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலிருந்து மாணவியின் உடலை, தங்கள் சொந்த ஊரான கடலூர் மாவட்ட பெரியநெசலூர் கிராமத்திற்கு பெற்றோர் கொண்டு சென்று அவரது வீட்டில் வைத்து இறுதி சடங்குகளைச் செய்தனர். பெரியநெசலூர் கிராமத்தில் அசம்பாவிதங்களும், வன்முறையும் நடைபெறாமல் தடுப்பதற்கு 800க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். பெரியநெசலூர் கிராமத்தின் எல்லையில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மாணவியின் இறுதி ஊர்வலத்தில், மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
இன்று காலை 10.45 மணி அளவில் மாணவியின் இறுதி ஊர்வலம் துவங்கியது. இதில், அவரின் உறவினர்களும், ஊர் மக்களும் ஏராளமானோர் கலந்துகொண்டனர். மாணவியின் உடலுக்கு இடுகாட்டில் செய்யவேண்டிய இறுதி மரியாதையை அவரது குடும்பத்தினர் செய்தனர். மேலும், அமைச்சர் சி.வி.கணேசன், “கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, நம் அன்பு மகள் மாணவி ஸ்ரீமதி நம்மைவிட்டு பிரிந்திருக்கிறார். அந்த மாணவியின் ஆத்மா சாந்தி அடைய நாம் அனைவரும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்” என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மாணவிக்கு இடுகாட்டில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின் மாணவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாணவி நல்லடக்கத்தில் அமைச்சர் சி.வி. கணேசன், எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டு மாணவிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.