கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருவங்கூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் அய்யம்மாள். இவரது கணவர் ராஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்த நிலையில் அவரது இறுதிச் சடங்கு இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், தனது மகன் பிரவீன் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசையுடன் வாழ்ந்து வந்த ராஜேந்திரன் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அடுத்த வாரம் மார்ச் 27 ஆம் தேதி அன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் ராஜேந்திரன் திடீரென உயிரிழந்ததும், தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் தந்தையின் சடலம் முன்பு பிரவீன் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த சொர்ணமால்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரவீன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த சொர்ணமால்யா என்பவரும் வேலை செய்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதுகுறித்து சொர்ணமால்யாவின் பெற்றோருடன் சந்தித்து இருவரும் சம்மதம் பெற்றனர். அதேபோல் பிரவீன் தனது தந்தை ராஜேந்திரன் தாய் அய்யம்மாள் ஆகிய இருவரிடமும் சம்மதம் பெற்று திருமண நிச்சயதார்த்தம் முறைப்படி நடந்துள்ளது. பிரவீனும், சொர்ணமால்யாவும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் கலப்புத் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.