Skip to main content

மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற கணவன்! 

Published on 18/01/2022 | Edited on 18/01/2022

 

Kallakurichi issue police registered case

 

மனைவியை கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள முதலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயது லோகநாதன். இவரது மனைவி 32 வயது பேபி. கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 ஆண் மற்றும் ஒரு பெண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கள் சொந்த ஊரில் பொங்கல் விழாவைக் கொண்டாடுவதற்காக ஒரு வாரத்திற்கு முன்பு ஊருக்கு வந்துள்ளனர். 

 

லோகநாதனுக்கும் அவரின் மனைவிக்கும் இடையே அவ்வப்பொழுது சண்டைகள் வந்துள்ளன. அதேபோல், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கணவன் மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த லோகநாதன் வீட்டின் மாடியில் இருந்த மனைவியிடம் சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில், லோகநாதன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது மனைவியின் உடலில் பல இடங்களில் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அவரும் மதுவில் விஷம் கலந்து குடித்தத்தோடு அங்கேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்துள்ளார். 

 

தாய் தந்தைக்கு இடையே நடந்த இந்த கொடூர காட்சியை கண்ட அவரது பிள்ளைகள் கத்தி சத்தம் போட்டுள்ளனர். இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று லோகநாதனை தூக்கில் இருந்து காப்பாற்றி திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு அவர் தற்போது மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ளார். 

 

இதுகுறித்து தகவலறிந்த திருக்கோவிலூர் காவல் நிலைய ஆய்வாளர் பாபு, உதவி ஆய்வாளர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக பேபியின் சகோதரி சரோஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், பேபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்