Skip to main content

உயிரோடு இருந்தவரை இறந்ததாகக் கூறிய மருத்துவ ஊழியர்களால் பரபரப்பு!

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

kallakurichi incident at government hospital


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தற்போது வரை 9,097 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 95 பேர் இறந்துள்ளனர். மற்ற அனைவரும் குணமடைந்துள்ளனர். தற்போது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 95 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 35 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில்  தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த  56 வயது மனோ (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் சாதாரண ஜுரம், உடல் வலி என்பதற்காக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 


இந்த நிலையில் மனோ, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்துவிட்டதாகக் கூறி அவரது குடும்பத்தினருக்கு மருத்துவமனையிலிருந்து தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மனோ உடலை தொட்டியத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். அங்கிருந்த அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸில் வந்த உடலை திறந்து பார்த்துள்ளனர். எல்லோருக்கும் அதிர்ச்சி, காரணம் அந்த உடல் மனோவின் உடல் இல்லை என்று தெறியவந்தது. இந்தத் தகவல் உடனடியாக மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டது. 


அவரது உடலை ஊருக்கு எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள், மீண்டும் அந்த உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு திரும்பி எடுத்துவந்தனர். அதையடுத்து, அரசு மருத்துவமனை டாக்டர்கள் தீவிர விசாரணை செய்ததில், மனோ உயிரோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்தது.

 

முன்னர், மனோ சிகிச்சையில் இருந்த அதே வார்டில், வேறு நோய்க்காக சிகிச்சை பெற்றுவந்த திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 52 வயது ராமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் திடீரென்று இறந்துபோய் உள்ளார். இதில், குழப்பமடைந்த ஊழியர்கள், இறந்தது மனோதான் என்று முடிவு செய்துவிட்டனர். காரணம் அவர்கள் இருவரும் பக்கத்து பக்கத்து பெட்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அதனால், இந்த இருவரின் மருத்துவ அறிக்கையும் இடம் மாறிவிட்டது. இதனால் மருத்துவமனை ஊழியர்கள் இறந்தது மனோ என்று முடிவு செய்து உள்ளனர் என்பதும் தெரியவந்தது. 

 

இதனால், ஏற்பட்ட குழப்பத்தினால் உயிரோடு இருந்த தொட்டியம் மனோ இறந்து போனதாகக் கூறிவிட்டனர். இதன்பிறகு திருக்கோவிலூர் ராமன் உடலை மீண்டும் ஆம்புலன்சில் ஏற்றி திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுபோய் ஒப்படைத்துள்ளனர். இந்தக் குழப்பத்தின் காரணமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பணியின்போது கவனக் குறைவாக இருந்த டாக்டர்கள் சரஸ்வதி, சரவணன் மற்றும் 5 செவிலியர்கள் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவப் பணிகள் மாவட்ட இணை இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

சார்ந்த செய்திகள்