ஜல்லிக்கட்டில் மாடு பிடிப்பது தொடர்பாக துரைமுருகன், அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை.
2020- 2021 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் உரை மீதான விவாதம் பேரவையில் நடைபெற்று வருகிறது.
மூன்றாவது நாளான இன்று (18/02/2020) பட்ஜெட் உரை மீதான விவாதத்தின் போது சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, குறைந்த ரேஷன் கார்டுகள் உள்ள பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைக்கு பதில் நகரும் ரேஷன் கடை அமைக்கப்படும்" என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய திமுகவின் சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் துணை தலைவருமான துரைமுருகன், ஓபிஎஸ்-சை ஜல்லிக்கட்டு நாயகன் என்கிறார்கள், அவர் எப்போது மாடு பிடித்தார்? அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஓபிஎஸ் மாடு பிடித்தால் எம்எல்ஏக்கள் பார்க்க ஆவலாக உள்ளோம்" என்றார்.
இதற்கு விளக்கமளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் நிறைவேற்றி தந்த காரணத்தால் ஓபிஎஸ்- சை ஜல்லிக்கட்டு நாயகன் என்கின்றனர். புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் மாடு பிடிக்க துரைமுருகன் வந்தால் ஏற்பாடு செய்து தர தயார்" என்றார். இவர்களின் பேச்சால் சட்டப்பேரவை சிறிது நேரம் கலகலப்பாக இருந்தது.