சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தனது உதவியாளரை அழைத்து தனது செருப்பை தூக்கச் சொன்ன விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா வரும் 18ம் தேதி சாகை வார்த்தல் உடன் தொடங்க உள்ளது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான திருநங்கைகள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து கலந்து கொள்வார்கள். அடுத்த மாதம் இரண்டாம் தேதி தாலி கட்டுதல் நிகழ்ச்சியும் அதற்கு அடுத்த நாள் திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது.
இதனையொட்டி திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்வதற்காக கூத்தாண்டவர் கோவிலுக்கு வருகை தந்த போது கோவில் உள்ளே செல்வதற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் தனது காலணியை கழட்டி விட்டு தனது உதவியாளரை அழைத்து காலணியை எடுத்துச் செல்லுமாறு கூறி உள்ளார். அதனைத் தொடர்ந்து காலணிகளை அவரது உதவியாளர் எடுத்துச் சென்ற சம்பவம் அங்கே ஆய்வுக்காக வந்திருந்த மற்ற அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார், கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் நடைபெற்ற சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.