கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் அதிமுக மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் பெற்றுக் கொண்டு திருப்பி தராமல் மோசடி செய்துவிட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், “கடந்த மக்களவை தேர்தலில், விழுப்புரம் தொகுதியில் போட்டியிட எனக்குச் சீட்டு வாங்கி கொடுப்பதாகக் கூறி, என்னிடம் மாவட்டச் செயலாளர் குமரகுரு ரூ.1.60 கோடி பணம் பெற்றுக்கொண்டார். ஆனால், எனக்கு வாய்ப்பு வழங்காமல் வேறொரு நபருக்கு வாய்ப்பு வழங்கினார். அதுபற்றி குமரகுருவிடம் பலமுறை கேட்டபோது, தான் மக்களவைத் தேர்தலில் அதிகம் செலவு செய்து தோல்வி அடைந்ததால் சிறிது காலம் கழித்துத் தருகிறேன் என்று தட்டிக் கழித்தார்.
இதையடுத்து சிறிது காலம் கழித்து நானும் குமரகுரு வீட்டுக்குச் சென்று கேட்டபோது அவர் என்னைக் கடுமையாகத் தாக்கினர். அதனால் நெஞ்சு வலி ஏற்பட்டு நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன். நடந்த சம்பவம் குறித்து கட்சித் தலைமையிடம் புகார் அளித்தேன். அதன்பேரில் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி என்னையும், குமரகுருவையும் நேரில் அழைத்து விசாரித்தார். அதன் பின்னரும் குமரகுரு எனது பணத்தைத் திருப்பி தரவில்லை. கட்சித் தலைமையில் புகார் அளித்ததால், பணத்தைத் திருப்பித் தர முடியாது. பணம் வாங்கியதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை. உன்னால் முடிந்ததைப் பார்த்துக்கொள் என்று மிரட்டு தொனியில் பேசியுள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.