சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் ஒன்றாகச் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த 31ம் தேதி இந்தப் புகார் குறித்து மாநில மகளிர் ஆணையத் தலைவர் விசாரணை நடத்தினார். அதன்பின் மாணவிகள் அந்தப் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றனர்.
இந்நிலையில், கலாஷேத்ரா கல்லூரியில் 2019ம் ஆண்டு படித்த கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்தக் கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கிடையில், கலாச்சார நிகழ்ச்சிக்காக மாணவிகளுடன் ஐதராபாத் சென்றிருந்த ஹரி பத்மன் சென்னை திரும்பியதும் வழக்கு விசாரணைக்காக போலீஸில் ஆஜராவேன் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஐதராபாத் சென்ற கலாச்சார நிகழ்ச்சிக்காக சென்றிருந்த குழுவினர் சென்னை திரும்பினர். ஆனால், அவர்களுடன் ஹரி பத்மன் சென்னை வராமல் தலைமறைவாகியுள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவான ஹரி பத்மனை போலீஸார் தீவிரமாக தேடி வருவதாக காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.