சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்குப் பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகார் எழுந்த நிலையில், கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து மாணவிகள் அளித்த புகார் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை ஹைதராபாத்தில் வைத்துக் கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். 60 நாட்களுக்கும் மேலாகச் சிறையில் இருந்த ஹரிபத்மனுக்கு கடந்த ஜூன் 6 ஆம் தேதி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. மேலும் இது தொடர்பாக விசாரிக்க கலாஷேத்ரா நிர்வாகம் சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் இயக்குநர் ஜெயபதி ராமச்சந்திரன் இடம் பெறக் கூடாது என பாதிக்கப்பட்ட மாணவிகள் 7 பேர் சார்பில் தனித்தனியாக வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘விசாரணைக் குழுவில் தங்களது பெற்றோர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பு அந்த குழுவில் இடம் பெற வேண்டும்’ என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கண்ணன் தலைமையிலான குழு தாக்கல் செய்த அறிக்கையில், “பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம், பல்கலைக்கழக மானியக்குழுவின் சட்டம் ஆகியவற்றின் மூலம் பாலியல் தொல்லைகளை தடுக்க விரிவான கொள்கை வகுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் அமர்வு முன்பு இன்று (22.02.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “மாணவிகளின் புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்காமல் கலாஷேத்ரா நிர்வாகம் கொடும் பழிக்கு உள்ளாகியுள்ளது. மாணவிகளின் புகார் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான குழுவின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. இந்த குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து உடனடியாக பரிசீலிக்க வேண்டும். புகாருக்குள்ளான நீக்க வேண்டும் என்ற கண்ணன் குழுவின் பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்” என தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.