மறைந்த திமுக தலைவர் கலைஞர் நினைவிடத்தில் கலைஞரின் குடும்ப உறுப்பினர்கள் இன்று தற்போது அஞ்சலி செலுத்தினர்.
திமுக தலைவர் கலைஞர் நேற்று முன்தினம் காலமானார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் நேற்று காலை முதல் ராஜாஜி அரங்கில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் படைசூழ அவரின் உடல் இறுதி ஊர்வலமாக அண்ணா நினைவிடம் கொண்டு செல்லப்பட்டு, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கலைஞரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது
இதனைத்தொடர்ந்து நேற்று இரவு முதல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலைஞர் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று கண்ணீருடன் மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னையில் நேற்று இரவு கனமழை பெய்தது. இருந்தும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பொது மக்களும், கட்சி தொண்டர்களும் இரவு முழுவதும் கலைஞரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து 2வது நாளாக இன்றும் காலை முதல் கலைஞரின் நினைவிடத்தில் ஏராளமான மக்கள் குவிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது கலைஞரின் குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் இரண்டாவது நாளாக இன்று மாலை கலைஞர் நினைவிடத்தில் ஒன்று கூடி அஞ்சலி நடத்தினர். அப்போது மழை பொழிந்தால் சிறிதுநேரம் காத்திருந்து பின்னர் அஞ்சலி செலுத்தினர்.