தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா நாணய வெளியீட்டு விழா நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெறுகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரின் நூற்றாண்டு நினைவையொட்டி அவரது உருவம் குறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட இருக்கிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்களும், கட்சித் தலைவர்களும் பங்கேற்க இருக்கின்றனர். வெளியிடப்படும் நாணயத்தில் கலைஞரின் உருவத்துடன் அவர் கையெழுத்தில் 'தமிழ் வெல்லும்' என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
ஏற்கனவே கலைஞரின் நூற்றாண்டு நாணயத்தை வெளியிடும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை தமிழக முதல்வர் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. சென்னையில் கலைவாணர் அருகில் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கலைவாணர் அரங்கம், கலைஞர் நினைவிடம், வாலாஜா சாலையை பொதுமக்கள் தவிர்க்க போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
காமராஜர் சாலை, சாந்தோம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வணிக வாகனங்களுக்கு அனுமதி இல்லை எனவும் விஐபி மற்றும் விவிஐபி வாகனங்கள் காமராஜர் சாலை, நேப்பியர், அண்ணா சாலை வழியாக செல்ல அனுமதி அளித்துள்ளனர். மூத்த கலைஞர்கள் கதீட்ரல் சாலை, ஆர்.கே.சாலை, காமராஜர் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலையில் செல்லலாம், கனரக கட்சி வாகனங்கள் பெரியார் சிலை, தீவு திடல் மைதானம், பிடபிள்யூடி வழியாக செல்ல அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.