திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வரும் செப். 2ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் கலைஞர் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக தெருக்கூத்து நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, நொளம்பூரில் நேற்று (26ம் தேதி) சென்னை தெற்கில் கலைஞர்-100 "நாட்டுடை தலைவனை போற்றிடும் பாட்டுடை அரங்கம்" எனும் பெயரில் இலக்கிய விழா நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். தொடந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “அடுத்த சனிக்கிழமை (செப்.2ம் தேதி) சைதாப்பேட்டையில் ஒரு தெருக்கூத்து நிகழ்ச்சி நடத்தப்போகிறோம். அந்த தெருக்கூத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை அரங்கேற்றப்போகிறோம். அந்தத் தெருக்கூத்து கிராமங்களில் நடைபெறுவதுபோலவே இருக்கைகள் எல்லாம் இல்லாமல், தரையில் போர்வை விரித்து அதில் அமர்ந்து பார்க்கும்வகையில் ஏற்பாடு செய்துள்ளோம். மேலும், கிராமங்களில் இருப்பதுபோலவே கூட்டத்தின் இருபுறத்திலும் வடை சுட்டு விற்கப்படும். அந்த வடைகளை வாங்கி சாப்பிட்டபடியே கூத்தை ரசிக்கலாம்” என்றார்.