Skip to main content

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்; மேல்முறையீட்டுக்கான கால அவகாசம் நீட்டிப்பு

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

kalaignar Women Rights Project Extension of time for appeal

 

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் முறைப்படி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தகுதியுள்ள மகளிரின் வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டது. அதே சமயம் அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் உரிமைத்தொகை திட்டத்தில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி விண்ணப்பிக்கத் தவறியவர்களும் தகுதி இருந்தால் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

அதனைத் தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருவதால், அதற்கு முதல் நாளான 14 ஆம் தேதியான சனிக்கிழமையே வரவு வைக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இரண்டாவது மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை கடந்த 14 ஆம் தேதியே  மகளிரின் வங்கிக் கணக்கிற்கு ரூ.1000 வரவு வைக்கப்பட்டன. மேலும் தகுதியான பயனாளி ஒருவர்கூட விடுபட்டுவிடக் கூடாது என்ற நோக்கில் திருநங்கைகள் உள்ளிட்ட பல்வேறு தகுதியான குடும்பத் தலைவியர் கண்டறியப்பட்டு அக்டோபர் மாதத்திற்கான கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற தகவலையும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கான குறுஞ்செய்தி தாமதமாக வரப்பெற்றவர்கள் அக்டோபர் 24 ஆம் தேதி வரை மேல் முறையீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம் தாமதமாக குறுஞ்செய்தி வந்தவர்கள் அந்த தேதியில் இருந்து 30 நாட்களுக்குள்ளாக மேல் முறையீடு செய்ய வேண்டும். இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல் முறையீடு செயதுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்