சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்று பல்வேறு நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ள 1,200 மாணவ, மாணவியருக்குப் பணி நியமன ஆணைகளை இன்று (06.10.2023) வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே என்றிருந்த, கல்வியை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சென்றடைய செய்தவர் கலைஞர். கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. நம் மாநில மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று படித்த காலம் போய், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து படிக்கிற ஒரு சூழலை கலைஞர் உருவாக்கினார். கல்வியில் மட்டுமன்றி தொழில் வளர்ச்சியிலும் தமிழ்நாட்டை பல்வேறு உயரங்களுக்கு கலைஞர் எடுத்துச் சென்றார். வேலைவாய்ப்பை பெருக்கினார். கலைஞருடைய வழியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசும் செயல்பட்டு வருகின்றது. அதற்கு ஒரு சாட்சி தான் இந்த நான் முதல்வன் திட்டம்.
படிக்கின்ற இளைஞர்கள் ஒவ்வொருவரையும் அவரவர் துறையில் முதல்வர்கள் ஆக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட திட்டம் தான் இந்த நான் முதல்வன் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இலக்கை தாண்டி 13 லட்சம் இளைஞர்கள் பயிற்சி பெற்றனர். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 61 ஆயிரத்து 921 பொறியியல் மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இதில் அதிகபட்சமாக வருடத்திற்கு 40 லட்சம் ஊதியத்துடன் மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. கலைக் கல்லூரிகளை பொறுத்தவரை இதுவரை 57 ஆயிரத்து 312 மாணவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இன்றைக்கு நடைபெறுகிற இந்த நிகழ்ச்சியில், ஆண்டு ஊதியமாக 2 லட்சத்தில் தொடங்கி 29 லட்ச ரூபாய் வரை பெறக்கூடிய வகையில், பணி நியமன கடிதங்களை வழங்கியுள்ளோம்.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப தேவைகளுக்கு ஏற்ப தமிழ்நாட்டு மாணவர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்கி, அதன் மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்கவே நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. முதலில் பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதனுடைய தேவை உணர்ந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள், பள்ளிக் கூடங்கள் என அனைத்து கல்வி நிலையங்களுக்கும், இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.” என்றார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை செயலர் தாரேஷ் அகமது, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக மேலாண்மை இயக்குநர் ஜெ. இன்னசென்ட் திவ்யா எனப் பலரும் கலந்து கொண்டனர்.