சென்னை லயோலா கல்லூரியில், லயோலா கல்லூரியின் நூற்றாண்டு தொடக்க விழா நேற்று (01.08.2024) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, அமைச்சர்கள் க. பொன்முடி, பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் நா. எழிலன், இனிகோ இருதயராஜ் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “கடந்த 1925ஆம் ஆண்டு தன்னுடைய கல்விப் பணியை லயோலா கல்லூரி தொடங்கியது. 75 மாணவர்களோடு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரி இன்றைக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னார்தான் படிக்கலாம் இன்னார் படிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் தலைவிரித்து ஆடிய காலத்தில் அனைவரும் படிக்கலாம் என்ற பெரிய வாசலைத் திறந்து விட்ட எத்தனையோ கல்லூரிகளில் லயோலா கல்லூரியும் மிகவும் முக்கியமான ஒன்று. சமூகத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்குக் கல்விக் கண்ணைத் திறந்து விட்ட கல்லூரி இந்தக் கல்லூரி.
இந்திய நாட்டின் முதல் பத்து சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக லயோலா கல்லூரி இருக்கிறது. இது லயோலாவுக்கு மட்டும் பெருமை மட்டுமில்லை, ஒட்டுமொத்த நம்முடைய தமிழ்நாட்டிற்கும் தான் பெருமை. இந்தியாவில் எந்த வகைப்பட்ட கல்வி நிறுவனத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் தலைசிறந்த கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் மாநிலமாக நம்முடைய தமிழ்நாடுதான் இருக்கிறது. இதற்குக் காரணம், கல்விதான் ஒருவரின் அனைத்துத் தடைகளையும் தகர்த்துத் தலைநிமிரச் செய்யும் என்று கல்வி புரட்சியைத் தொடங்கி வைத்தது நீதிக்கட்சி. அந்த நீதிக்கட்சி வழிவந்தவர்கள் நாங்கள். அதனால்தான் கல்விக்கு நாங்கள் அதிகம் முக்கியத்துவம் தந்தோம். இன்னும் தந்து கொண்டிருக்கிறோம். தொடர்ந்து தருவோம் என்பதுதான் எங்களுடைய நம்பிக்கை.
நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்கள் அனைவருக்கும் தரமான கல்வி கிடைத்தால்தான் திராவிட மாடல் என்று சொல்வதில் அர்த்தம் இருக்கும். பெருந்தலைவர் காமராசரின் காலம் பள்ளிக் கல்வியின் பொற்காலமாக இருந்தது. கலைஞர் ஆட்சிக்காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலமாக இருந்தது. இன்றைய திராவிட மாடல் ஆட்சியானது உயர் கல்வியின் பொற்காலமாக ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாகத் திகழ்ந்து வருகிறது. நாங்கள் (ஆட்சியாளர்கள்) நாடு ஒளிபெறப் பாடுபடுகிறோம். நீங்கள் (ஆசிரியர்கள்) மாணவர் சமுதாயம் ஒளிபெறப் பாடுபடுகிறீர்கள்.
தமிழ்நாடு ஒளிமயமானதாக இருப்பதை இந்தக் காலகட்டத்தில் லயோலாவும் தன்னுடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது. இந்த சேவை விலைமதிப்பு இல்லாதது. இந்த கல்லூரியின் உழைப்பு, கணக்கிட முடியாதது. அதனால்தான் இதனுடைய புகழும் அளவிட முடியாததாக இருக்கிறது. இந்த கல்லூரிக்குப் புகழும் பெருமையும் கிடைப்பது போல, இங்கே படிக்கின்ற மாணவர்களுக்கும் கிடைக்கவேண்டும்” எனப் பேசினார்.