Skip to main content

“ஒருபுறம் தண்ணீரில் தவிக்கிறோம், மறுபுறம் தண்ணீருக்காகவே தவிக்கிறோம்” - ஒரு கிராமத்தின் சோகம்

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

Kaduvetti villagers suffering without drinking water

 

மழைக்காலத்தில் வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள் குடிதண்ணீருக்காக இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீரைப் பிடித்து சைக்கிளிலும் தலையிலும் சுமந்து செல்லும் அவலம் இன்றும் தொடர்கிறது.

 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது காடுவெட்டி கிராமம். கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள இந்த கிராமத்தில் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த பகுதியில் கடல்நீர் புகுந்து நிலத்தடி நீர் முழுவதும் உப்பாக மாறிவிட்டது. இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலைக்கு அக்கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் கோடியக்கரை வரை தடையின்றி போகிறது. ஆனால், ஆற்றின் கரையை ஒட்டியே இருக்கும் இந்த மக்களுக்கோ தண்ணீர் கிடைப்பதில்லை. 

 

"கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருவதால் அடிப்படை உபயோகத்திற்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் தவிக்கிறோம்" என்று கூறியபடியே அந்த கிராமத்துப் பெண்கள் தலையிலும், சிறுவர்கள் சைக்கிளில் குடங்களைக் கட்டிக்கொண்டும் அடுத்தடுத்த கிராமத்திற்கு தண்ணீரைத் தேடி அலைந்து வருகின்றனர்.

 

Kaduvetti villagers suffering without drinking water

 

"மழைக்காலத்தில் ஆற்றில் இருகரைகளையும் தொட்டுக்கொண்டு தண்ணீர் போகும். ஆனால், குடிதண்ணீர் எடுப்பதற்கு இதைவிட பெரும் சிரமப்பட்டே எடுத்து வருவோம். வெளியே செல்ல முடியாத மழைக்காலத்தில் எங்கள் நிலைமை மோசமாகிடும் பள்ளிக்கூடத்திற்கும் கல்லூரிக்கும் செல்லும் மாணவர்கள் வீட்டிற்குத் தேவையான தண்ணீர் பிடிப்பதிலே அவர்களின் நேரம் கடந்துவிடும். காலதாமதமாக பள்ளிக்கூடம் போக நேரிடும்" என்கிறார்கள் அந்த கிராமத்துப் பெண்கள்.

 

“இந்த கிராமம் கொள்ளிடம் ஆற்றின் கரையை ஒட்டியே அமைந்திருந்தும் எந்த பயனும் எங்களுக்கு இல்லை. ஏனென்றால், கடல்நீர் உட்புகுந்து கொள்ளிடம் ஆற்று நீர் முற்றிலும் உப்பாக மாறியதால் ஆற்றுநீரைக் கூட பயன்படுத்த முடியாத அவல நிலையாகிடுச்சி. கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தினந்தோறும் தண்ணீர் வழங்க வேண்டுமெனவும் அரசுக்கு நாங்கள் பல வருடங்களாகக் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆடு, மாடுகளுக்குக் கூட தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகிறோம். தமிழக அரசும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகமும் தனிக்கவனம் செலுத்தி கிராமத்திற்கு தினந்தோறும் குடிநீர் கிடைக்க வழி செய்ய வேண்டும்" என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதீனத்துக்கு மிரட்டல்; பா.ஜ.க நிர்வாகிகளின் ஜாமீன் மனு மீது நீதிமன்றம் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
The court is acting on the bail plea of ​​BJP executives for intimidation to Adinam

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி (21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த மார்ச் 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில் ‘அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி இந்த வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையைக் கடந்த 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கு, நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு கடந்த 24ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்த போது, குடியரசு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க பொதுச் செயலாளர் வினோத் மற்றும் முன்னாள் ஒன்றியச் செயலாளர் விக்னேஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு அளித்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர்கள் அளித்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

Next Story

சங்கம்விடுதி குடிநீர் தொட்டி விவகாரம்! அதிகாரிகள் ஆய்வு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sangamviduthi drinking water tank issue officials investigation

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதே பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கும் இந்த தண்ணீரே வழங்கப்படுகிறது. ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமுதாய மக்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. பாகுபாடற்ற ஒற்றுமையான கிராமமாக உள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு காலையில் குழாயில் தண்ணீர் தூசியாக வந்துள்ளதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துவிட்டு தண்ணீரை வெளியேற்றி பார்த்துள்ளனர். உள்ளே பாசி போல கருப்பாக ஆங்காங்கே கிடந்துள்ளது. அவற்றை சேகரித்து வெளியே எடுத்து பார்த்த போது கூடியிருந்தவர்கள் ஒவ்வொருவரும் மாட்டுச் சாணம் என்றும், தொட்டி சரியாக கழுவாததால் சேர்ந்துள்ள பாசி என்றும் கூறினர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

இந்த தகவல் அறிந்து வருவாய்த் துறை, ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து விசாரனை செய்தனர். தொடர்ந்து தண்ணீரையும், தண்ணீர் தொட்டியில்இருந்து சேகரிக்கப்பட்ட கழிவுகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றதுடன் தற்காலிகமாக சம்மந்தப்பட்ட தண்ணீர் தொட்டியில் இருந்து குடிநீர் கொடுப்பதை நிறுத்திவிட்டு டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அறந்தாங்கி டிடி நமச்சிவாயம் தலைமையில் கடந்த 2 நாட்களாக அந்த ஊரில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. மேலும் அதே பகுதியில் உள்ள காவிரி குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வழங்க அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள சிலர் கூறும் போது, தண்ணீர் தொட்டி சரிவர சுத்தம் செய்யாததால் தேங்கிய பாசி கரைந்து குழாய்களில் வந்திருக்கலாம். மேலும் இந்த ஒரே தொட்டியில் இருந்தே அனைத்து சமூதாயத்தவர்களுக்கும் தண்ணீர் போவதால் வேறு கழிவுகளை கலந்திருக்க அச்சப்படுவார்கள். ஆய்வு முடிவுகள் வந்த பிறகே உண்மை நிலை தெரியும். அதற்குள் யாரும் சமுதாய ரீதியாக அணுக வேண்டாம் என்கின்றனர்.

Sangamviduthi drinking water tank issue officials investigation

தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்த டிடி நமச்சிவாயம்.. கழிவு இருந்ததாக மக்கள் சொன்னார்கள் கழிவுகள், தண்ணீர் ஆய்விற்கு போய் உள்ளது. ஏதேனும் கலந்த தண்ணீரை குடித்திருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு வந்திருக்கும். இதுவரை இந்த கிராமத்தில் அப்படி எந்த பாதிப்பும் இல்லை. மேலும் தண்ணீர் தொட்டியில் மீண்டும் சுத்தம் செய்து தண்ணீர் ஏற்றி குளோரின் செய்யப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்யும் போது கலப்படம் இருந்தால் தெரியும். இரண்டு நாள் மருத்துவ முகாமில் நேற்று 40 பேரும் இன்று 12 பேருமே வந்துள்ளனர். அவர்களும் சாதாரணமாக வந்தவர்கள் தான். தொடர்ந்து ஆய்வுகள் நடக்கிறது என்றார். இந்த நிலையில் போலீசார் வஜ்ரா வாகனத்துடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.