வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் சார்பில் விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பில்,
"வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் வெண்கலச் சிலை அமைக்கப்படும். திமுக ஆட்சியில் இருந்தபோது தஞ்சை பெரிய கோவிலுக்குத் தமிழில் குடமுழுக்கு செய்திருந்தால் அதை முன்னுதாரணமாக நினைத்துச் செய்யலாம். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல் தற்போது ஸ்டாலின் கேட்கிறார். சம்பிரதாயப்படிதான் குடமுழுக்கு நடைபெறும்.
துக்ளக் விழாவில் பெரியாரைப் பற்றி ரஜினி பேசியதற்கு வழக்குபதிவு செய்யப்பட்ட பிறகு தற்போது கருத்து கூற இயலாது. அதைப் பற்றி ரஜினிதான் விளக்கம் கூற வேண்டும். சமூகமும் அரசியலும் கெட்டுப் போயிருந்தால், ஏன் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்? தமிழ்ச் சமுதாயம் தான் உலக மக்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக உள்ளது.
குடியுரிமைச் சட்டத்தைப் பொறுத்தவரை முதலமைச்சரும், வருவாய்த் துறை அமைச்சரும் சட்டமன்றத்திலேயே தெளிவான விளக்கம் கொடுத்துவிட்டனர். சிறுபான்மை மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தமிழக அரசு பாதுகாக்கும்.
காங்கிரஸைப் பற்றி திமுகவினர் இவ்வளவு தூரம் கூறிய பிறகும் காங்கிரஸ் தன்மானம் இருந்தால் அங்கு நுழையக் கூடாது.
நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெற்ற வெற்றி நிரந்தரமானதல்ல. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. நகராட்சி தேர்தல் எப்போது என்பதை தேர்தல் ஆணையமே அறிவிக்கும். அறிவித்த பிறகு தமிழக அரசு அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
திராவிடம் குறித்து கமல் பேசியிருக்கிறார். கமல், திராவிடர் இல்லையா? அவருக்கு அரசியல் தெரியவில்லை. அரைகுறையாகப் பேசுகிறார். ஜெயலலிதாதான் அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர். தற்போதைய நிலைமையை தொடரும்.
சசிகலாவைப் பற்றி இணை ஒருங்கிணைப்பாளரும் துணை ஒருங்கிணைப்பாளரும் முடிவெடுப்பார்கள்." என்றார்.