கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில் தமிழக மற்றும் இலங்கை மீனவர்கள் கலந்துக் கொண்டனர். அங்கு இந்திய, இலங்கை மீனவர்களுக்கு இடையே நட்பு ரீதியிலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
இந்திய, இலங்கை மீனவர்கள் பங்கேற்கும் கச்சத்தீவு அந்தோணியார் தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் விதமாக ஜாதி, மத, மொழி வேறுபாடுகள் இன்றி இரண்டு நாட்கள் மத நல்லிணக்க திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதில் தமிழகத்தில் இருந்து 76 பேரும். இலங்கையில் இருந்து 88 பேரும் பங்கேற்றுள்ளனர்.
திருவிழாவில், பங்கேற்றுள்ள இந்திய, இலங்கை மீனவர்களிடையே நட்பு ரீதியிலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சுமார் 15 நிமிடங்கள், இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டக்ளஸ் தேவானந்தா, "இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் இந்தியா வரவுள்ளார். அவருடனும் இந்த பேச்சுவார்த்தைத் தொடங்கும், தவறான புரிதல்கள் பேச்சுவார்த்தை மூலம் சரி செய்யப்படும்" என்றார்.
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடமும் தமிழக மீனவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.