கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்தியா - இலங்கை உறவை மேம்படுத்தும் திருவிழாவாக கொண்டாடப்படும் இந்த விழாவில் தமிழக மீனவர்களும் அனுமதிக்கப்படுவர். மொத்தம் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் தொடக்க விழா இன்று (23.02.2024) மாலை அந்தோணியார் உருவம் பொறிக்கப்பட்ட கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்த கொடியை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஏற்றி வைத்தார்.
அதே சமயம் ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருக்கு இலங்கை நீதிமன்றம் சிறை தண்டனை விதித்ததை ரத்து செய்து மீனவர்கள் 3 பேரையும் விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிப்பதாகவும் மீனவர்கள் அறிவித்திருந்தனர். இதன் காரணமாக கச்சத்தீவுக்கு செல்லும் பயணத் திட்டத்தை ரத்து செய்வதாக வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இரவு 7 மணியளவில் சிலுவைப் பாதையும், தேர் பவனியும் நடைபெற உள்ளது. திருவிழாவின் இரண்டாம் நாளான நாளை (24.02.2024) காலை கூட்டு திருப்பலி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து கொடி இறக்கத்துடன் கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா முடிவடைகிறது.