Skip to main content

கச்சநத்தம் கொலை வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு! 

Published on 27/07/2022 | Edited on 27/07/2022

 

Kachannatham  case; Judgment deferred!

 

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகில் உள்ள கச்சநத்தம் எனும் கிராமத்தில் ஆதி திராவிட மக்கள் மீது கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி ஆவாரங்காடு எனும் கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவினரை சேர்ந்தவர்கள் இரவில் கொடூரமான வகையில்  தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் மூன்று நபர்கள் கொல்லப்பட்டனர். கொடுங்காயத்தால் உடல் நலிவடைந்து ஒரு வருடம் கழிந்து மேலும் ஒருவர் இறந்தார். ‌5 நபர்கள் கொடுங்காயமுற்று ஊனமுற்றவர்களாக வாழ்ந்து வருகின்றனர். காவல்துறையின் புலனாய்வு முடிவடைந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிறார்கள் உள்ளிட்ட 10 நபர்கள் பிணையில் வெளியே வந்தனர்.

 

முதன்மைக் குற்றவாளிகளில் இரண்டு நபர்களின் பிணையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தை அணுகி முறையிட்டதன் விளைவாகப் பிணையை ரத்து செய்து,  தொடர்புடையவர்கள் சரணடைய வேண்டுமென உச்சநீதிமன்றம் 10.04.2019 அன்று உத்தரவு பிறப்பித்தது. அதனால் சிறையில் இருக்கும் ஏனையோர் பிணையில் வருவது தடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தால் பிணை ரத்து செய்யப்பட்ட சிலர் உயர்நீதிமன்றத்தை அணுகி பிணை பெற முயற்சித்தனர்.

 

கடந்த 26.09.2019 அன்று, குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிணையில் வருவது இவ்வழக்கிற்கே பெரும் அச்சுறுத்தலாக இருக்கக் கூடும் என்றும் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கிலும் ஒரு பொதுநல வழக்கை எழுத்தாளர் இளம்பரிதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இம் முறையீட்டில் கச்சநத்தம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் அனைத்து வழக்குகளிலும் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் முன்னிலையாக வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. அடுத்த நாளே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மனுதாரரின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு ஆணையிட்டது.

 

இந்நிலையில் வழக்கானது, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி விரைவு வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு, அரசு சிறப்பு வழக்கறிஞராக சின்னராசு என்பவர் நியமிக்கப்பட்டு, சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 33 நபர்களில் ஒருவர் இறந்துவிட, ஏனையோர் மீது வழக்கு நடந்து முடிந்திருக்கிறது. 

 

கச்சநத்தம் தொடர்பான வழக்கு சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக கருதியிருந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்