பேரறிவாளன் விடுதலையை திருவிழாவாக கொண்டாடுவதைப் பார்க்கும்போது இதயத்திலிருந்து ரத்தக்கண்ணீர் வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளன் அண்மையில் விடுதலை செய்யப்பட்டார். தன்னுடைய சிறப்பு அதிகார சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. பேரறிவாளன் விடுதலையை பல்வேறு தரப்பினர் வரவேற்றாலும் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ராஜீவ் காந்தியின் நினைவு தினமான இன்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி, “ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது எங்கள் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாக ஓடியது. அந்தக் கொலையாளியின் விடுதலையை திருவிழாவாக கொண்டாடுவதை பார்க்கும்போது இதயத்திலிருந்து ரத்தக்கண்ணீர் வடிகிறது. எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாங்கள் கதறுகிறோம்; கண்ணீர் விடுகிறோம். மனிதாபிமானத்தோடு வாழ்வதுதான் மனிதத்தன்மை” எனத் தெரிவித்தார்.