Skip to main content

“ஏழைகளுக்கு சிறந்த கல்வியை கொடுக்கிறது சேவாமந்திர் பள்ளி” - கே. பாலகிருஷ்ணன் புகழாரம்

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

k balakrishnan talk about Sevamandir School

 

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள சேவா மந்திர் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தொடங்கி 100 ஆண்டை கடந்துள்ளது. இதனையொட்டி பள்ளியில் நூற்றாண்டு விழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் முகமது யூனுஸ் தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் லீலாவதி அனைவரையும் வரவேற்றார்.  

 

இதில் சிறப்பு விருந்தினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி பேசுகையில், கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு  ஆனிஸ்மேரி பீட்டர்சன்ஸ் டென்மார்க்கில் இருந்து கப்பல் மூலமாக பரங்கிப்பேட்டை பகுதிக்கு வந்துள்ளார். இவர் கப்பலில் இறங்கி அவரது பை உள்ளிட்ட உடமைகளை கீழே வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது பொருட்கள் திருடப்பட்டுள்ளது. இவர் அடுத்த வேலை உணவுக்கு  வழி இல்லாமல் நின்றுள்ளார்.  பின்னர் அவர் எதையும் நினைக்காமல் இந்த மக்கள் இவ்வளவு வறுமையாக இருக்கிறார்களே, இவர்களை வளமாக மாற்ற வேண்டும் என மனித நேயத்தோடு பல்வேறு சகிப்புத் தன்மையை பொறுத்துக்கொண்டு சிறந்த பணியாற்றி அவர் உருவாக்கிய சேவா மந்திர் பள்ளி இன்று  100 ஆண்டு கடந்துள்ளது.  அதை சாதாரண பணியாக கருதி விட முடியாது.

 

இது மட்டுமல்ல இவர் இந்த நாடு ஏன் அடிமைப்பட்டு கிடக்க வேண்டும் எனக் கருதி காந்தியடிகளுடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு காந்தியின் நன்மதிப்பை பெற்றுள்ளார்.  மேலும் காலில் செருப்பு அணிவது கிடையாது. அவருக்குத் தேவையான உடையை அவரே தயார் செய்து அணிந்து கொள்வார். செருப்பு, உடை வாங்கும் பணத்தில் ஏழை பிள்ளைகளுக்கு உணவு, கல்வி வழங்கலாம் என ஆடம்பர செலவும் இல்லாமல் எளிமையாக பெண் கல்விக்காக தியாக வாழ்வு மேற்கொண்டுள்ளார். இவரது சேவையை பாராட்டும் விதமாக காந்தியடிகள் இவர் தொடங்கிய முதல் பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல் எடுத்துவைத்து சேவைக்காகத் தொடங்கிய இந்தப் பள்ளிக்கு சேவா மந்திர் என பெயர் வைத்துள்ளார்.  ஆனிஸ்மேரி பீட்டர்சன்ஸ் நினைத்திருந்தால் கிறிஸ்துவ மிஷனரி பெயரில் அந்தப் பள்ளியைத் தொடங்கி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை.

 

அதன் பிறகு  பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்து பள்ளியின் வளர்ச்சிக்கு பாடுபட்டதால் பள்ளியிலேயே ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தனியாக இருபாலர் மெட்ரிகுலேஷன் பள்ளி என வளர்ந்துள்ளது.  இந்தப் பள்ளியில் படித்த மாணவி விமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். இங்கு படித்த மாணவிகள் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் உள்ளனர். ஏழைகளுக்கு கல்வி கொடுப்பதுதான் சிறந்த பணி அதனை யாரும் அழிக்க முடியாது அவரே அழிந்தால்தான் அது அழியும் என இந்தப் பள்ளியைத் தொடங்கியுள்ளார்.

 

200 ஆண்டுகளுக்கு முன்பு உயர் சாதியினர் மட்டுமே கல்வி பயில வேண்டும். சூத்திரன் வேதம், கல்வி பயின்றால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்த வேண்டும் என மனுஸ்மிருதியில் குறிப்பிட்டுள்ள சூழலில் உழைப்பாளி மக்களுக்கும் ஏழை பெண் குழந்தைகளுக்கும் 100 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி வழங்கிய இவரது மனிதாபிமானத்தை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். தமிழகத்தில் 42 ஆயிரம் அரசுப் பள்ளிகள் செயல்பட்டாலும் 8,000 பள்ளிகளை கிறிஸ்துவ மிஷனரிகள் நடத்துகிறார்கள்.  இதில் ஏழை அடித்தட்டு மாணவ மாணவிகளுக்கு சாதி, மதம் பார்க்காமல் கல்வி வழங்கி வருகிறார்கள். கல்வியில் இவர்களின் சேவை பாராட்டுக்குரியது" என பேசினார்.

 

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன், ஆற்காடு லுத்ரன் திருச்சபை பேராயர் சாமுவேல் கென்னடி, டென்மார்க் நாட்டைச் சார்ந்த லாரா, பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் தேன்மொழி சங்கர், சேவா மந்திர் நிர்வாக உறுப்பினர் ஜாஸ்வா பீட்டர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

 

இந்நிகழ்சிக்கு பள்ளியின் முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது பயிலும் மாணவ, மாணவிகள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். இவர்கள் விழா மேடையில் பள்ளி பருவத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை நினைவுபடுத்திப் பேசி மகிழ்ந்தனர். அதேபோல் பரங்கிப்பேட்டை பகுதியில் வசிக்கும் கிராம மக்களையும் அழைத்து அவர்களுக்கு மதிய உணவு வழங்கி சிறப்பித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்