சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து செவ்வாய்க்கிழமை(23.7.2024) மாலைமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “மத்திய அரசு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். புதிய அரசு, புதிய நிதிநிலை அறிக்கையாக இருக்கும் என எதிர்கட்சியினர் உள்ளிட்ட அனைவரும் எதிர்பார்தனர். ஆனால் இதில ‘அரசும் புதுசா தெரியல, திட்டங்களும் புதுசா இருக்கிற மாதிரி தெரியல, மொந்தையும் பழசா இருக்கு, கல்லும் பழசா இருக்கிற மாதிரி தான் உள்ளது’. இந்த நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருள்களுக்கு நியாயமான விலை வழங்கக்கூடிய பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக கோரி வருகிறோம். இதற்காக விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவை இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. ஏற்கனவே 2 கோடி பேருக்கு வேலை தருவதாக கூறினார்கள், தற்போது அதிகமாக வேலை வாய்ப்பு அளிப்போம் என கூறியுள்ளார்.
வேலை கொடுக்கும் திட்டங்களுக்கு பதிலாக, வேலைக்கான பயிற்சி கொடுப்போம் என அறிவிக்க முடியுமே தவிர, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை கொடுப்பது என்பது குறித்து குறிப்பிடவில்லை. அதே போன்று குறிப்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மெட்ரோ உள்ளிட்ட பல வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு கோரினார். குறிப்பாக துறைமுகத்திலிருந்து திருவெற்றியூர் வரை பறக்கும் சாலைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரினார். ஆனால் தமிழ்நாட்டிற்கான எந்த ஒரு திட்டத்திற்கும் நிதி ஒதுக்கவில்லை.
பட்ஜெட்டில் உள்ள 62 பக்கங்களில் ஒரு இடத்தில் கூட தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. தமிழ்நாட்டை மொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கையாக உள்ளது. நிதிநிலை அறிக்கையின் குறிக்கோள் என்னவென்றால் கூட்டணி கட்சிகளான ஆந்திரா, பீகார் மாநிலத்திற்கும் பல திட்டங்களுக்கு பகிரங்கமாக நிதி ஒதுக்கி திருப்தி படுத்தியுள்ளது. ஆட்சி பறிபோய் விடும் என்ற ஆபத்து ஏற்படும் என்பதால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடனில் சிக்கி தவிக்கும் நலிவுற்றுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் தொழில்களுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. வாங்கிய கடனுக்கு வட்டியை கூட கட்ட முடியவில்லை. அந்த வட்டியைக் கூட தள்ளுபடி செய்யப்படவில்லை. எனவே விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், கிராமப்புற வளர்ச்சி ஆகியவற்றிற்கான போதுமான அளவு நிதி ஒதுக்கப்படவில்லை.
மத்திய அரசு பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கான நிவாரண திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது செல்வ வரி விதித்து வசூலித்து அதனை ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளோம். உலகம் முழுவதும் இந்த கோரிக்கை எழுந்துள்ளது. ஜி-20 மாநாட்டில் கூட அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு அந்நிய நாட்டின் கார்ப்பரேட் நிறுவனத்தின் வரி 40 சதவீதத்தை, 35 ஆக குறைத்துள்ளது வருத்தமாக உள்ளது.
தமிழ்நாடு அரசு மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். திமுக அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருவதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. மத்திய அரசின் நிர்பந்தத்தின் பேரில் தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு 3வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசுக்கு நல்ல பெயரை தராது என்பதால் இதனை தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டும். மின்கட்டண உயர்வை திரும்பெற வலியுறுத்தி ஜூலை 24 இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது” என்றார். இவருடன் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.ராமச்சந்திரன் நகர செயலாளர் எஸ்.ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் பி.வாஞ்சிநாதன், சிதம்பரம் நகர மன்ற துணைத் தலைவர் எம்.முத்துக்குமாரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.