நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. நாளை (16.03.2024) தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில் கோவையின் கண்ணப்ப நகரில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரையில் 4 கி.மீ. தூரத்திற்கு பிரதமர் மோடி மார்ச் 18 ஆம் தேதி (18.03.2024) ரோடு ஷோ நடத்த உள்ளார். இதற்காக கோவை மாவட்ட பா.ஜ.க. சார்பில் கோவை மாநகர காவல் துறையினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்த மாநகர காவல் ஆணையர் அனுமதி மறுத்திருந்தார். ஏற்கனவே கோவையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதையும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதையும் மேற்கோள்காட்டி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பா.ஜ.க. சார்பில் கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் அவரச வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘பாதுகாப்பு காரணங்கள், பொது நிர்வாகத்தை கருத்தில் கொண்டு தான் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ரோடு ஷோ மூலம் பாதிப்பு ஏதும் இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு இன்று (15.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், “இதுபோன்று அனுமதி கேட்கும் எந்த கட்சிக்கும், அமைப்புக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “ரோடு ஷோவுக்கு அனுமதி அளிப்பதில் என்ன பிரச்சனை உள்ளது. பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழு பிரதமரின் பாதுகாப்பை கவனித்துக்கொள்ளும் நிலையில், பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்தால் ரோடு ஷோவுக்கு எப்படி அனுமதி வழங்கியிருப்பார்கள். ஒரு வேளை பாதுகாப்பு குறைபாடு இருக்குமானால் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவின் மூலமே ரோடு ஷோ நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும்” எனத் தெரிவித்தார். அதற்கு போலீஸ் தரப்பில், “தமிழக போலீஸ் தரப்பில் பேரணிக்கு தங்களிடம் தடையில்லா சான்று கேட்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விவகாரத்தில் மாநில காவல்துறைக்கு சமமான பொறுப்பு உள்ளதால் அவற்றை கருத்தில் கொண்டுதான் தற்போது ரோடு ஷோ நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “பிரதமர் மோடி மார்ச் 18 ஆம் தேதி கோவைக்கு வருகை தரும்போது, சில நிபந்தனைகளுடன் 4 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடத்த அனுமதிக்க வேண்டும்” என உத்தரவிட்டு இது தொடர்பான விரிவான விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்.