விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த 2019ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார். அதில் அவர் பேசுகையில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேசி, வன்முறையைத் தூண்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த மனு இன்று (06.02.2025) நீதிபதி வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒவ்வொரு நாளும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்படுகிறது நீதிமன்றம் செல்ல வேண்டியுள்ளது என்று வாதிட்ட சீமான் வழக்கறிஞரிடம், “ ஒவ்வொரு நாளும் உங்கள் மனுதாரர் சீமான் அவதூறாகவும் திமிராகவும் வரம்பு மீறி பேசுகிறார் அப்பொழுது வழக்குப்பதிவு செய்ய தானே வேண்டும். நீதிமன்றம் அதில் தலையிட முடியாது வழக்கு வேண்டாம் என்றால் வாயை கட்டுப்படுத்த சொல்லுங்கள். ஜனநாயக நாட்டில் குறிப்பாக இந்திய அரசியல் சாசனம் Article 19 இன் படி எந்த அவதூறை வேண்டுமானாலும் பேசிவிட்டு தப்பித்து விடலாம் என்று சீமான் கணக்கு போட வேண்டாம். தினசரி சீமான் யாரையாவது திட்டிக்கொண்டு அவதூறு பரப்பிக் கொண்டு தூண்டிவிட்டுக் கொண்டே இருக்கிறார். சமுதாயத்தில் பதட்டம் ஏற்படுத்துகிறார்.
இது மிகவும் கண்டனத்துக்குரிய செயல். நீதிமன்றம் கண்களை மூடிக்கொள்ளாது. இதுவரை நீதிமன்றம் தானாக வந்து இந்த விஷயத்தை கையில் எடுக்கவில்லை. கையில் எடுக்க வைத்து விடாதீர்கள். அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது. குறைந்த பட்சம் அவர் நான்கு நீதிமன்றம் ஏறி இறங்கினால் தான் அவருக்கு வாய் கட்டுப்படுத்த இயலும். தற்பொழுது நிதானமற்ற மனிதராக இருக்கிறார். நீதிமன்றம் செல்லட்டும் என்னால் விலக்களிக்க முடியாது. போகிற போக்கில் நிதானம் இல்லாமல் எதையோ பேசிக் கொண்டே இருக்கிறார் என்று நீதிபதி வேல்முருகன் சீமானை கடுமையான வார்த்தையில் சாடியுள்ளார்.