முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, வேட்புமனுவில் தவறான தகவல்களைத் தெரிவித்த விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட மனுவை மீண்டும் பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி, 1,091 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்புமனுவிலும், பிரமாண பத்திரத்திலும் தவறான தகவல்களைத் தெரிவித்ததாக கே.சி. வீரமணிக்கு எதிராக குற்றம் சாட்டி, அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ராமமூர்த்தி என்ற வாக்காளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வேட்புமனுவில் தவறான தகவல்களைத் தெரிவிப்பவர்களுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் எனவும், மனுதாரரின் மனுவை மீண்டும் பரிசீலிப்பதாகவும் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவுசெய்த நீதிபதிகள், வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர். மேலும், தேர்தல் செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள தேர்தல் செலவு உச்சவரம்பை அனைத்து வேட்பாளர்களும் பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தினர்.