
சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெ.விடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சரிபார்க்கப்பட்டு வரும் நிலையில் நாளை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் அவை ஒப்படைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
1991-96 ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்து வழக்கு தொடுக்கப்பட்டது. இதில் அவரிடமிருந்து 27 கிலோ தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் உள்ளிட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 1500 க்கும் மேற்பட்ட ஏக்கர் சொத்துக்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட ஆவணங்களும், சொத்துக்களும் 2004 ஆம் ஆண்டு முதல் பெங்களூரில் உள்ள அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த சொத்துக்கள் அனைத்தையும் விற்று நீதிமன்றத்தில் கட்ட வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதி ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து தங்க நகைகள், ஆவணங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நீதிபதி மோகன் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் இன்று பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தங்க நகைகள், ஆவணங்கள் அரசு கருவூலத்தில் இருந்து எடுத்துவரப்பட்டு சரிபார்க்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 37 காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். சொத்துக்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் இவை அனைத்தும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. நாளை இவை முழுமையாக தமிழகம் கொண்டுவரப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.