ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அ.தி.மு.க. அரசு 2016-2020ம் ஆண்டில் புதிய மருத்துவ காப்பீடு என்ற பெயரில் அரசாணை எண் 202ன் படி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் மூலம் ஒரு ஊழியருக்கு ரூ.180/- வீதம் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து வந்தது. ஆனால், இத்திட்டத்தின் பயன் நோயாளிகளுக்கு உண்மையிலேயே சென்றதா? என்றால் கேள்விக்குறிதான் என்கிறார்கள் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியனோ.,
"அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டணமில்லா சிகிச்சை பெறும் நோக்கில் கொண்டுவரப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது என்பதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதன்பின் மேம்படுத்தப்பட்ட புதிய மருத்துவ காப்பீடில் 8 மடங்கு சந்தா தொகை கூடுதலாக வசூலித்தும் எங்களுக்கு வழங்க வேண்டிய சிகிச்சைக்கான முழு பணத்தையும் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்காமல் ஏமாற்றி வருகிறது. தமிழக அரசிடம் ஒப்பந்தம் செய்துள்ள யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் எம்.ஐ.டி. இந்தியா என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை மாற்றியுள்ளது.
இந்நிறுவனம் இங்குள்ள பெரிய மருத்துவமனைகளுடன் ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் ஒரு குறிப்பிட்ட தொகை என ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த குறிப்பிட்ட தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் பெற்றுக்கொள்வதுடன் மருத்துவமனைகள் கொள்ளை இலாபம் சம்பாதிக்க தங்களிடம் வரக்கூடிய நோயாளிகளிடம் அவர்களின் உயிரை பணயமாக வைத்து மிரட்டி முன்பணம் என்ற பெயரில் அதிகப் பணத்தை பெறுகின்றனர். அதோடு இல்லாமல் சிகிச்சைக்கான முழு தொகையையும் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்காமல் மோசடி செய்து வருகிறது. இந்த மோசடிகள் குறித்து எங்கள் அமைப்பு மூலம் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு ஜூன் 2016 சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு 4 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது.
ஆனால் இந்த வழக்கு இதுநாள் வரை நிலுவையில் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக பல நூறு ஆசிரியர்களின் பல்வேறு சிகிச்சையில் எங்கள் அமைப்பு நேரடியாக தலையிட்டு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் வாதாடி பல கோடி ரூபாயை ஆசிரியர்களுக்கு பெற்று தந்துள்ளோம். மோசடி செய்த சில புகழ்பெற்ற மருத்துவமனைகளை இத்திட்டத்திலிருந்து தற்காலிக நீக்கம் செய்ய காரணமாகியிருக்கிறோம். விழிப்புணர்வில்லாத ஆசிரியர்களிடம் மருத்துவனையும், இன்சூரன்ஸ் நிறுவனமும் இணைந்து சிகிச்சைக்கான முழு தொகையை அனுமதிக்காமல் கோடிக்கான ரூபாயை ஏமாற்றி வருகின்றன. இந்த குறைபாடுகளை களைவதற்கு மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களால் எவ்வித பயனும் இல்லை.
அவர்களை தொடர்பு கொண்டால் உரிய பதிலை அளிப்பதுமில்லை. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் நடைபெற வேண்டிய குறைதீர் கூட்டங்களை அதிகாரிகள் முழுமையாக நடத்துவதில்லை. இதனால் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழக அரசு இதில் தலையிட்டு தவறு செய்கிற மருத்துவமனைகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், ஏற்கனவே உறுதியளிக்கப்பட்ட இந்தியா முழுமைக்குமான கட்டணமில்லா சிகிச்சையை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்." என்கிறார் அவர்.