திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழக அரசின் விருதுகள் இன்று 9 பேருக்கு வழங்கப்பட்டது. இவ்விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இவ்விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையனுக்கு பெரியார் விருதும், எம்.ஜி. பாட்சாவுக்கு திருவள்ளுவர் விருதும், மருத்துவர் சி. ராமகுருவுக்கு அம்பேத்கர் விருதும், பேராசிரியர் மு. அய்க்கண்ணுவுக்கு அண்ணா விருதும், பழ. நெடுமாறனுக்கு காமராசர் விருதும், மா. பாரதி சுகுமாறனுக்கு பாரதியார் விருதும், தியாரூவுக்கு பாரதிதாசன் விருதும், முனைவர் மு. கணேசனுக்கு திரு.வி.க. விருதும், சூலூர் கலைப்பித்தனுக்கு கி.ஆ.பெ. விசுவநாதம் விருதும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் 92 பேருக்கு அரசு உதவித்தொகை வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பேசிய முதல்வர், உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க அதிமுக அரசு தொடர்ந்து போராடி வருகிறது. அரசின் விருதுகளில் 60 விருதுகளை அதிமுக அரசுதான் அறிவித்து வழங்கி வருகிறது. தஞ்சை பல்கலைக்கழக நூலகத்திலுள்ள அரிய நூல்களை மின்னாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மெரினா வளாகத்தில் தொல்காப்பியருக்கு சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. முன்னாள் அமைச்சர் முனைவர். தமிழ்குடிமகன், திரு. மேலாண்மை பொன்னுச்சாமி, முனைவர். பொன் சவுரிராஜன் ஆகியோர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. திரு. ஐராவதம் மகாதேவன் எழுதிய நூல்கள் நாட்டுடமையாக்க அரசு பரிசிலிக்கும்.