
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகில் உள்ள சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ஊமத்தநாடு ஊராட்சி பெரியகத்திக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் பவுன்துரை (30). இவரது மனைவி அருள் சோபியா (27). இருவரும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கரோனா ஊரடங்கால் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சில நாட்களுக்கு முன்பு மின்கசிவு ஏற்பட்டு அவர்களது குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது.
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. வீடு முழுவதும் எரிந்து நாசமானது. தீ விபத்தில், வீட்டில் இருந்த உணவுப் பொருட்கள், டிவி, பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், செலவுக்கு வைத்திருந்த ரொக்கப்பணம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் கருகி சாம்பலானது. இதனால் கட்டிய துணிகளோடு அருகில் உள்ள வீட்டில் தஞ்சமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்த, தி.மு.க. பிரமுகர் பேராவூரணி பேரூராட்சி முன்னாள் தலைவர் அசோக்குமார், தி.மு.க. தலைமைக்கழகப் பேச்சாளர் அப்துல் மஜீத்துடன் சாலை வசதி இன்றி, தனித்தீவாக இருக்கும், பெரியகத்திக்கோட்டைக்கு, நேரில் சென்று பாதிக்கப்பட்ட தம்பதிகளைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவர்களுக்கு ஒரு மாத காலத்திற்குப் பயன்படும் வகையிலான ரூ 5 ஆயிரம் மதிப்புள்ள அரிசி, பருப்பு, மளிகை, காய்கறிகள், புத்தாடைகள் ஆகியவற்றை வழங்கினார். மேலும் அவர்கள் குடியிருக்க உடனடியாக குடிசை வீட்டை மீண்டும் சீரமைப்பதற்கான செலவு தொகை ரூ 10 ஆயிரம் பணத்தையும் வழங்கினார்.
உதவியைப் பெற்றுக் கொண்ட ஜான் பவுன் துரை, "கரோனா ஊரடங்கு காரணமாக, வேலை இன்றி வீட்டில் முடங்கிக் கிடக்கும் இச்சூழலில், குடிசையையும், இழந்து விட்டோம். தகவல் அறிந்து வந்த முன்னாள் பேரூராட்சி தலைவர் வீடு கட்ட உதவி செய்ததை மறக்க முடியாது" என்றார். முன்னாள் பேரூராட்சி தலைவரின் இந்த மனிதநேயச் செயலுக்கு, பலரும் பாராட்டினார்கள்.