கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள சாய்ஏந்தல் கிராமத்தில் பல நாட்களாக திருட்டுத்தனமாக சாராயம் காய்ச்சி விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுபற்றிய ரகசிய தகவல் போலீசார்க்கு கிடைத்தது.
![ALCOHOL -](http://image.nakkheeran.in/cdn/farfuture/fv0EDR9K6-oWP6X_hq1sbBbDz1w51bIKMmzkCbwTORI/1581328432/sites/default/files/inline-images/v321_1.jpg)
அதனடிப்படையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ்ஸ்ரீ உத்தரவின் பேரில் மத்திய புலனாய்வு பிரிவு ஆய்வாளர் கோவிந்தராஜ், உதவி ஆய்வாளர் அழகிரி உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 2.00 மணியளவில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அக்கிராமத்தின் ஏரிக்கரையில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த சாமிதுரையை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதின் அடிப்படையில் அவரது மகன்களான ராஜேந்திரன் மற்றும் வேலு என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது, 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட 29 கேன்களில் 1450 லிட்டர் சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் தீவிர விசாரணையில் ஈடுபடும்போது சாமிதுரையின் அண்ணனான துரைசாமி என்பவர் வீட்டில் திருட்டுத்தனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கேன்களிலிருந்த 1000 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் அதிரடியாக கைப்பற்றினர். இந்நிலையில் சாமிதுரையின் அண்ணன் துரைசாமி மற்றும் அவரது மகன்கள் ராஜேந்திரன், வேலு ஆகிய மூவரும் தப்பியோடினர். பின்னர் சாமிதுரை மீது வழக்குப்பதிவு செய்த விருத்தாசலம் கலால் பிரிவு போலீசார் தப்பித்த குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.