Skip to main content

“ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்” - ஜோதிமணி எம்.பி

Published on 06/12/2022 | Edited on 06/12/2022

 

Jothimani MP said Governor rn ravi favor of online gambling companies

 

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.  எம்பி ஜோதிமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

 

காலாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் செயல்படுவதன் விதம், நிறைவேற்றப்பட்ட பணிகள், கல்வி, சுகாதாரம், குழந்தைகள் மேம்பாடு, பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் எம்பி ஜோதிமணி கேட்டறிந்தார்.
 

அனைத்து துறை அதிகாரிகளும் அதற்கான உரிய விளக்கங்களை அளித்தனர். அதேபோல மாநகராட்சி நகர்ப்புற பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் விளக்கி பேசினார். தொடர்ந்து பல்வேறு திட்டங்களில் உள்ள பிரச்சனைகள் குறித்து கேட்டு அந்தப் பிரச்சினைகளை விரைந்து முடிக்கவும் எம் பி ஜோதிமணி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

 

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜோதிமணி,  “தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 97 சதவீதம் மாவட்ட நிர்வாகம் நிறைவேறியுள்ளது. மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. முழுவதும் பல்வேறு பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. பல துறைகளில் மாவட்ட நிர்வாகம் முன்னணியில் உள்ளது. மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்.

 

தமிழக ஆளுநர், பாஜக  மாநில தலைவர் போல் செயல்படுகிறார். ஆளுநர் மாளிகை பாஜக கட்சி அலுவலகம் போல் செயல்படுகிறது. ஆன்லைன் சூதாட்டம் அவசர சட்டத்திற்கு ஆளுநர் அனுமதி அளித்தார். அதே அவசர சட்டம் மசோதா கொண்டுவரப்பட்டபோது அதற்கு அனுமதி அளிக்க கவர்னர் மறுக்கிறார்.

 

அவசர சட்டத்திற்கும், மசோதாவிற்கும் இடையில் என்ன நடந்தது. எதற்காக தமிழக மக்களின் நன்மைகளை புறக்கணித்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் நலன்களுக்காக தமிழக ஆளுநர் வேலை செய்கிறார். சூதாட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவாக ஆளுநரை செயல்பட சொன்னது யார்? மத்திய அரசா, பாஜகவா, அவர் சார்ந்த அமைப்பா என ஆளுநர் விளக்க வேண்டும். மிக நிச்சயமாக இடைப்பட்ட காலத்தில் ஆளுநர் தமிழகத்திற்கு துரோகம் செய்கிறார். அப்படிப்பட்ட ஆளுநர் தமிழகத்திற்கு தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்