திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் ராமகிருஷ்ணன் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் தலைமையில் எஸ்.ஐ. முருகானந்தம் மற்றும் போலீசார் மணிமாறன், பிரபு அடங்கிய குழுவினர் ரெயில்களில் சட்டவிரோதமான செயல்களை தடுக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காரைக்காலில் இருந்து திருச்சி வந்த ரயிலில் ஒரு பயணியின் உடைமையை சோதனை செய்தபோது அதில் நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் மதுரை வடக்கு மாசி வீதியைச் சேர்ந்த சந்திரசேகர் (55) என்பதும், நகை வியாபாரியான அவர், காரைக்காலில் இருந்து 44 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பிலான 115.34 பவுன் நகைகளை விற்பனைக்காக வாங்கி செல்வதும் தெரியவந்தது. ஆனால் அவரிடம் நகைக்கு உரிய ஆவணங்கள் இல்லை.
இதைத்தொடர்ந்து நகையை கைப்பற்றிய பாதுகாப்பு போலீசார், அவற்றை திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுபற்றி வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருச்சியில் உள்ள மாநில வரி அலுவலக அதிகாரிகள் ஆவணங்கள் இன்றி நகைகளை எடுத்து சென்றதற்காக சந்திரசேகருக்கு ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்து 466 அபராதம் விதித்தனர். அவர் அந்த தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தியதை தொடர்ந்து நகைகள் அவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.