Skip to main content

நகைகளை ஏலம் விடும் வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து மழையூரில் ஆர்ப்பாட்டம்

Published on 27/09/2017 | Edited on 27/09/2017
நகைகளை ஏலம் விடும் வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து
மழையூரில் ஆர்ப்பாட்டம்



புதுக்கோட்டை, செப்.26- பணம் செலுத்தி திருப்பிக்கொள்வதாகத் தெரிவித்தும் நகைகளை ஏலம்விட முயன்ற வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைமையில் செவ்வாய்க்கிழமையன்று போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த மழையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கிளை உள்ளது. இந்த வங்கியில் நகைகளை அடகு வைத்தவர்கள் குறிப்பிட்ட காலத்தில் திருப்பிக் கொள்ளாததால் வங்கி நிர்வாகம ஏலம் விடப்போவதாக அறிவித்தது. இதை அறிந்த சிலர் தாங்கள் பணம் செலுத்தி நகைகளைத் திருப்பிக்கொள்வதாகத் தெரிவித்தனர். ஆனால், வங்கி நிர்வாகமோ நிர்ணயித்தபடி செவ்வாய்க்கிழமை நகைகளை ஏலம்விடப் போவதாகத் தெரிவித்துவிட்டது.

சிபிஎம் தலைமையில் போராடம்

கந்துவட்டிக் கடையைப்போல செயல்படும் வங்கி நிர்வாகத்தின் அராஜக நடவடிக்கையைக் கண்டித்தும் பணம் செலுத்தி திருப்பிக் கொள்ள விரும்புபவர்களை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தியும் வங்கியின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.உடையப்பன் தலைமை வகித்தார். கறம்பக்குடி தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அருணாச்சலம், அஞ்சலை, திருப்பதி, அமராவதி உள்ளிட்ட ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

பெண் தீக்குளிக்க முயற்சி

இதற்கிடையே தன்னுடைய நகை பறிபோகப் போவதைத் தாங்கமுடியாமல் லெட்சுமி என்ற பெண் மண்ணெண்ணைக் கேனுடன் வந்து தீக்குளிக்க முயற்சித்தார். அங்கு காவலுக்கு நின்ற போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரைத் தீக்குளிக்க விடாமல் தடுத்து காப்பாற்றினார்.

இதனைத் தொடர்ந்து வங்கி நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தது. கறம்பக்குடி துணை வட்டாட்சியர். மழையூர் காவல் உதவி ஆய்வாளர், வங்கி கிளை மேலாளர் முன்னிலையில் நடைபெற்ற இப் பேச்சுவார்த்தையில், நகைகளை திருப்பிக் கொள்ள விரும்புபவர்கள் 25 சதவிகிதத் தொகையை உடனடியாகவும் மீதத் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தி நகைகளைத் திருப்பிக்கொள்ள வங்கி நிர்வாகம் சம்மதித்தது. இதனைத் தொடர்ந்து மூன்றுமணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

-இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்