இந்த 21 ஆம் நூற்றாண்டிலும்.... மூடநம்பிக்கையின் அடிப்படையில் அதிர்சிகரமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. உதராணத்துக்கு ஜீவசமாதி என்ற பெயரில் கொலைகளும், தற்கொலைகளும் ஏற்பாடு செய்யப்படுகிறதோ என்ற அச்சம் பரவலாக எழுந்திருக்கிறது.
இணையத்தில் ‘சதுரகிரி சித்தர்கள்... மறைக்கப்பட்ட ஏடுகள்’ என்ற இணையதளம் ஆன்மிகச் செய்திகளைப் பரப்பிவருகிறது, கடந்த வாரம் அது திடீரென்று இரண்டு வீடியோக் காட்சிகளை வெளியிட்டது. அதைப் பார்த்த அத்தனை பேரும் நடுநடுங்கிப் போனார்கள்.
காரணம், காவி உடையணிந்த ஒரு முதியவரை, அவர் சம்மணமிட்டு அமர்ந்த கோலத்தில், அவர் உயிரோடு இருக்கிறாரா, இறந்து விட்டாரா என்று சொல்லாமல், அவர் ஜீவசமாதி அடைந்துவிட்டார் என்று கூறி... அவரை அமர்ந்த நிலையிலேயே தூக்கிவந்து, ஆழக்குழிவெட்டி அதில் அமர்ந்த நிலையிலேயே உட்காரவைத்து, அவருக்கு அபிசேகங்கள் செய்து... குழியை மூடினார்கள். இதை பக்தி பரவசமாய் வர்ணித்தது அந்த வீடியோ குரல்.
அந்த முதியவர் யார்? அவருக்கு எந்த ஊர்? அவருக்குக் குடும்பம் இருக்கிறதா? அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா? இறந்துவிட்டார் என்றால் எப்படி? எங்கே இறந்தார்? என்று எந்த விபரத்தையும் சொல்லாமல்... ஜிவசமாதி அடையும் நேரடிக் காட்சி என்று.. கண்ணெதிரே அவர் புதைக்கப்படுவதைக் காட்டினார்கள். காவிச் சாமியார்கள் புடைசூழ, காவியணிந்தவர்களே இதை நடத்தினார்கள். யாரிடமும் துளி துக்கம் இல்லை, வருத்தம் இல்லை. ஒரு சடங்கு போல் இயல்பாக அந்த புதைப்பை நடத்தினார்கள்.
ஜீவசமாதி என்றால்... அந்தக் காலத்தில் ரமணரைப் போன்ற துறவிகள்... தம் இறுதிக் காலத்தை உணர்ந்து... உண்ணாமல் யாரோடும் உரையாடாமல்... தியான நிலையில் அமர்ந்தவாறே உயிரிழப்பது ஆகும். இதை இப்போது சட்டம் அனுமதிக்காது. ஏனெனில் இது ஏறத்தாழ ஒரு தற்கொலை. ஆனால் இதே பாணியில் ஒருவரை ஜீவசமாதி அடையச்செய்வதும், அதை வேடிக்கை பார்ப்பதும் குற்றச்செயல். எனவேதான் இந்த ஜிவசமாதிக் காட்சி நெருடலையும், திகிலையும் ஏற்படுத்தியது. இந்த திகிலில் இருந்து மீள்வதற்குள் அடுத்த 2 ஆம் நாள் அதாவது ஏப்ரல் 18 ஆம் தேதி, மீண்டும் ஒரு ஜீவசமாதி காட்சியை வெளியிட்டிருந்தார்கள். இந்தமுறை ஆன்மீகத்தில் நாட்டமுடைய 13 வயது சிறுவன் தானே விரும்பி ஜீவசமாதி அடைந்துவிட்டதாக அறிவித்து வீடியோவை வெளியிட்டனர். அது எல்லோரையும் பதைபதைக்க வைத்தது.
காரணம், ஒரு சிறுவன் உட்கார்ந்த கோலத்தில் தூக்கிவரப்பட்டு இதேபோல் புதைக்கப்பட்டான். உயிர்ப்பு இருக்கும் போது, அந்த ஜிவசமாதி நடப்பதாக வர்ணனையாளர் பக்திப் பரவசத்தோடு அறிவிக்க, அந்த சிறுவன் புதைக்கப்பட்டான். இதைப் பார்த்தவர்கள் நடுநடுங்கிப் போய்விட்டார்கள், திகிலில் உறைந்துபோனார்கள். முகநூலில் இதைப் பார்த்து அதிர்ந்து போன பலரும் இது குற்றச் செயல். இது கொலைக்குச் சமமானது. இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படவேண்டும் என்று மனம் கலங்கிப் போய் கருத்துக்களைப் பதிவிட்டனர்.
இதன் பிறகே காவல்துறையின் கவனத்துக்கு இந்தத் தகவல் போனது. யார் அந்த சிறுவன்? அவனுக்கு என்ன நடந்தது? உண்மையில் அவன், பிறரால் மூளைச்சலவை செய்யப்பட்டு ஜீவசமாதி என்ற பெயரில் உண்ணாவிரதமிருந்து தற்கொலை செய்துகொண்டானா? என்றெல்லாம் தெரிந்துகொள்ள முயன்றோம். அப்போதுதான் பதறவைக்கும் தகவல்கள் கிடைத்தன.
புதைக்கப்பட்ட சிறுவன், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இருக்கும் ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவன். அவன் பெயர் தனநாராயணன். அவன் அப்பா ஹரி கிருஷ்ணன், அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சிறுவன் தனநாராயணனுக்கு வயது 16. படிப்பில் கெட்டி என்கிறார்கள். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 465 மார்க் எடுத்தவன். ஆன்மீக உணர்வூட்டி வளர்க்கப்பட்டவனாம்.
இந்நிலையில், தனநாராயணன் வீட்டிற்கு அருகில் இருந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்துவிட்டான் என்றும் அப்போது மீட்கப்பட்ட சிறுவனை பரிசோதித்த ஒரு சாமியார்... அவனுக்கு உயிர் இருக்கிறது. அப்படியே அவனைப் புதைத்து ஜீவசமாதி செய்தால்... ஊர் செழிக்கும் என்று கூறியதாகவும், அதன் அடிப்படையிலேயே அவன் புதைக்கப்பட்டதாகவும் ஊர்க்காரர்கள் திகிலூட்டினர்.
இந்த விவகாரம் அரசுத் தரப்புக்குப் போனது. திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி உடனடியாக சிறுவனின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, அதற்கான வேலைகள் நடந்தது. இதனால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.
புதைக்கப்பட்ட சிறுவனைத் தோண்டி, அங்கேயே பிரேத பரிசோதனை செய்து, மீண்டும் அவனைப் புதைத்தனர். இந்த ஜீவசமாதி என்கிற மூடநம்பிக்கைப் புதைப்பிற்கு காரணமான சாமியார் பழனியும், அவரது சிஷ்யர்கள் இருவரையும் காவல்துறை இப்போது கைது செய்திருக்கிறது. காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை பாராட்டுக்குரியது.
இயற்கையாக இறந்த ஒரு சிறுவனை ஜீவசமாதி என்று அறிவித்து, அதை விளம்பரப்படுத்தி புதைத்து, அதை வீடியோவாகப் பரப்புவது, ஒருவகைத் தற்கொலை நோயை ஆன்மிக நம்பிக்கையுள்ள பலருக்கும் உண்டாக்கலாம். எனவே இந்த பொய் ஜீவசமாதியை ஆதரிக்கும் சதுரகிரி சித்தர்கள் சங்கம் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.