Skip to main content

‘ஜெய்பீம் படத்தை அனைத்து பள்ளிகளிலும் காட்சிப்படுத்த வேண்டும்..’ - இளமாறன் கோரிக்கை

Published on 06/11/2021 | Edited on 06/11/2021

 

‘Jaybeam film should be displayed in all schools ..’

 

எதிர்கால தலைமுறைச் சிறக்க விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து பள்ளிகளிலும் ஜெய்பீம் திரைப்படம் போட்டுக்காட்ட வேண்டும். வரிவிலக்கு அளித்து திரையரங்குகளில் திரையிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத்தலைவர், பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கம்மாபுரம் மட்டுமல்ல. நாடெங்கும் இன்னும் இன்னும் சொல்லமுடியாத் துயரங்கள். அதனைப்போக்க அங்கொன்றும் இங்கொன்றும் சந்துருக்கள், பெருமாள் சாமிகள் வாழ்வின் விளிம்பில் வாழ்வியலைத் தேடி அலையும் மனிதக் கூட்டங்கள். எத்தனை எத்தனை செங்கனிகள், ராஜா கண்ணுகள் எண்ணிலடங்கா ஜெய்பீம் ஒரு சான்று. வன்புணர்வுக்கே வாக்கப்பட்டவர்களாக பழங்குடியினர்கள். திணிக்கப்பட்ட திருட்டு வழக்குகள், சிறைச்சாலை சித்ரவதைகளும், காவல் நிலையச்சாவுகளும். இன்றும் 28 ஆண்டுகளுக்கு முன் நடந்த விருத்தாச்சலம் - கம்மாபுரம் சம்பவம் படமாக்கப்பட்டவிதம் பார்ப்பவர்களை நிமிரவைக்கிறது.

 

நடிக்காமல் வாழ்ந்த செங்கனி, உயிரே போனாலும் மானம் போகாமல் காக்கும் ராஜாகண்ணு, உயிரோட்டமாய் மொசகுட்டி, இருட்டப்பன், ஹீரோயிசம் இல்லாத ஹீரோ சந்துருவாக சூர்யா, நேர்மையின் கம்பீரம் பெருமாள்சாமியாக பிரகாஷ்ராஜ், எங்கேயும் வழுக்காமல் திரைக்கதை மொத்தத்தில் நேர்த்தியான இயக்கம் ஞானவேலுவுக்கு எனது வாழ்த்துகள். துணிச்சலாகப் படமெடுத்த ஜோதிகா - சூர்யாவுக்குவும் எனது பாராட்டுகள்.

 

நாடு முழுவதும் பேசவைத்திருக்கிறது. அசுரன் வந்தபோதும் இதே பரபரப்பு. நாட்டில் 6000க்கும் மேற்பட்ட சாதிகள் இதில் விளிம்பு நிலையிலிருந்து சற்று தலைதூக்கியிருக்கிறார்கள் ஆதிதிராவிடர்கள் ஆனாலும் நசுக்கப்பட்டே வருகிறார்கள். இருளர்கள் உள்ளிட்ட பழங்குடி இனத்தின் வாழ்வு இருட்டாகவே இருந்து வருகிறது. ஆனால் உயிரைவிட மானம் பெரிதென்று வாழ்பவர்கள். இது வாழ்வுரிமைப் போராட்டம். நின்றுவிடாமல் பட்டிதொட்டியெல்லாம் போய்சேர வேண்டும். தொடரும் காவல்துறையின் அத்துமீறல், மனிதநேயமற்றச் செயலுக்கு தீர்வுகாண வேண்டும். அதேவேளையில் பெருமாள்சாமி போன்ற அதிகாரிகளை ஊக்குவிக்க வேண்டும். இப்படம் படமாக இல்லாமல் எதிர்கால தலைமுறை சிறக்க இன்றைய தலைமுறையும் உணரும் வகையில் பாடமாக அமைந்திட அனைத்துப்பள்ளிகளிலும் திரையிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் படத்துக்கு வரிவிலக்கு அளித்து அனைத்து திரையரங்குகளிலும் திரையிட வேண்டும். விளிம்புநிலையிலுள்ள மக்களுக்கு காவல்துறையில் மட்டுமல்ல மற்ற துறைகளிலும் இதுபோன்ற அத்துமீறல்கள் களையெடுக்க வேண்டும். 28 ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமல்ல இன்றும் தொடர்ந்துவரும் அநீதிகளுக்கு தீர்வுகண்டு அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் நீதியரசர் சந்துரு, பெருமாள்சாமி ஓய்வுபெற்ற அதிகாரிகள் தலைமையில் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் குழுவினை அரசு அமைத்து உதவவேண்டுமென்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்