மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 'வேதா நிலையம்' அரசுடைமையாக்கப்பட்ட நிலையில், இன்று (28.01.2021) திறக்கப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
போயஸ் கார்டனில் உள்ள 'வேதா நிலையம்' இன்று 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 'வேதா நிலையம்' திறக்கப்படுவதற்கான அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், பாதுகாப்பிற்காக காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
40 ஆண்டுகள் ஜெயலலிதா இங்கிருந்துதான், நாடாளுமன்ற உறுப்பினர், முதல்முறையாக சட்டப்பேரவை உறுப்பினர், அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர், தொடர்ச்சியாக 6 முறை முதல்வர் ஆகிய பதவிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் அதிமுகவின் அதிகார மையமாகவும் இந்த 'வேதா நிலையம்' செயல்பட்டது. தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாது உலகளவிலான அரசியல் தலைவர்களும் வந்து சென்ற இடமாக ‘வேதா நிலையம்’ இருந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், 2017 பிப்ரவரிக்குப் பின்னர், இந்த இல்லம் மூடப்பட்டது.
அரசுடமை ஆக்கப்பட்டு நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். வீட்டின் வெளியில் ‘ஜெயலலிதா நினைவு இல்லம்’ என்ற எழுத்துக்களைத் தாங்கிய பலகை வைப்பதற்கான ஏற்பாடுகள் இறுதியாக நடைபெற்று வருகிறது. நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின்படி கட்சி தொண்டர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உயர்நீதிமன்ற தடையால் வேதா இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட முடியாது. ஜெ.தீபா,ஜெ.தீபக் தொடர்ந்த வழக்கின் விசாரணை முடியும் வரை பொதுமக்கள் வேதா நிலையத்தை பார்வையிட அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், நிகழ்ச்சி முடிந்த பிறகு சாவியை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பேனர்கள் வைக்கக்கூடாது. அதேபோல் தீபா, தீபக் முன்னிலையில் வீட்டில் உள்ள பொருட்களை கணக்கெடுக்க வேண்டியுள்ளது. எனவே வேதா நிலையத்தில் பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தகுந்தது.