ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிற்குத் தடை கோரி டிராபிக் ராமசாமி மற்றும் சென்னையைச் சேர்ந்த எம்.எல். ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த 24-ஆம் தேதி நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லமானது, வருமான வரித்துறையின் முடக்கப்பட்ட சொத்துக்கள் பட்டியலில் உள்ளது என்று வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்தது. அத்துறை ‘ரூ.16.75 கோடி வரி பாக்கிக்காக ஜெ.வுடைய சொத்துக்களை முடக்கி வைத்துள்ளோம். அவற்றில் போயஸ் தோட்டமும் ஒன்று’ என அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதே நேரத்தில், போயஸ் தோட்ட இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் வருமான வரித்துறை தரப்பில் குறிப்பிட்டிருந்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நிலம் கையகப்படுத்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
இதனிடையே, ஜெயலலிதாவின் வங்கிக் கணக்குகள் இன்னும் செயல்பாட்டில் இருப்பதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, ஜெயலலிதாவுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்களின் மாத வாடகை மற்றும் கொடநாடு எஸ்டேட்டின் வருமானங்கள், ஒவ்வொரு மாதமும் ஜெயலலிதாவின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருவதுதான் அத்துறையினர் சமீபத்தில் அறிந்திருக்கும் விபரம்.
‘வரி பாக்கியைச் செலுத்திவிட்டு முடக்கப்பட்ட சொத்துக்களை மீட்க முன்வரும் படி ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே வருமானவரித்துறை சார்பில் சம்மன் அனுப்பினோம். அதனை ஜெயலலிதா புறக்கணித்தே வந்தார். அவருடைய வங்கிக் கணக்கோ, இன்னமும் செயல்பாட்டில் உள்ளது என்கிறது வருமான வரித்துறை.
2007 –லேயே ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு முடக்கப்பட்டது. வங்கிக் கணக்கு இன்றுவரையிலும் செயல்பாட்டில் உள்ளது. ஜெயலலிதா இறந்தது எப்படி என்ற மர்மமும் நீடிக்கவே செய்கிறது. மொத்தத்தில் புரியாத ஒரு புதிராகவே இருக்கிறார் ஜெயலலிதா!