அதிமுகவில் நடந்த பொதுக்குழுவுக்குப் பிறகு ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்தது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது ஓபிஎஸ் அணி எடப்பாடி அணி என அதிமுக பிரிந்து கிடக்கிறது. இச்சூழலில் ஓபிஎஸ் ஆதரவாளர்களும், எடப்பாடி ஆதரவாளர்களும் தொடர்ந்து தங்கள் தரப்பு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதே நேரம் சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் சசிகலா தொடர்பாக தீபா பேசியதாக வெளியான ஆடியோ ஒன்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சென்னை கீழ்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா பேசுகையில், ''அதிமுகவை பாஜக விழுங்க முடியாது. யாரையும் யாரும் விழுங்க முடியாது. சொல்வதெல்லாம் வாய்க்கு வேணும்னா சொல்லிட்டு போகலாம் அந்த மாதிரி நிலைமை எல்லாம் இங்கு இல்லை. சிகிச்சைக்காக வெளிநாடு கூட்டிச் செல்ல வேண்டாம் என ஜெயலலிதாதான் கூறினார். ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 5ஆம் தேதி தான் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இருந்தது. ஆனால் அவர் ரொம்ப திட்டவட்டமாக சொல்லிவிட்டார் 'இங்கேயே நன்றாக டிரீட்மென்ட் நடக்குது; இங்கே நல்லாதான் இருக்கு' என்று சொல்லிவிட்டார்'' என்றார்.