Skip to main content

போயஸ் கார்டலினிலிருந்து எப்படி அழைத்து செல்லப்பட்டார் ‘ஜெ’ - ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம்

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

Jayalalitha case Arumugam Samy commission report

 

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா, கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி தனது போயஸ் கார்டன் வீட்டிலிருந்து திடீரென இரவு அப்போலோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ஏறக்குறைய 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணத்தில் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வந்தனர். குறிப்பாக அவருக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும், அவர் எந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்பதிலும் அதிமுக தொண்டர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் சந்தேகங்களை எழுப்பினர். குறிப்பாக அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ஓ.பி.எஸ். தர்மயுத்தம் நடத்தி இன்னும் பரபரப்பை கிளப்பினார். 

 

Jayalalitha case Arumugam Samy commission report

 

இந்நிலையில், முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷனை அமைத்து அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையை துவங்கினார். ஆனால், அவர் தொடர்ந்து தனது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு வந்தார். அதற்கு அன்றைய அதிமுக அரசும் தொடர்ந்து அவருக்கு கால அவகாசம் அளித்து வந்தது. 

 

Jayalalitha case Arumugam Samy commission report

 

2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் சந்தேகங்கள் விசாரிக்கப்பட்டு அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையை விரைவில் தாக்கல் செய்ய ஆணையத்தை கேட்டுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து ஆறுமுகசாமி ஆணையமும் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை துரிதப்படுத்தி பல்வேறு நபர்களிடமும் விசாரணையை நடத்தி, கடந்த சில வாரங்களுக்கு முன் தனது அறிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது. 

 

Jayalalitha case Arumugam Samy commission report

 

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என முன்னதாக அரசு அறிவித்திருந்தது. அதேபோல், இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆணையம் சசிகலா, அன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து அவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளது. 

 

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில், ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி தனது போயஸ் கார்டன் வீட்டிலிருந்து இரவு அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது என்ன நிலையில் இருந்தார் என்பதை விவரித்துள்ளது. அதன்படி, ‘மறைந்த முதல்வர் தனது வீட்டின் முதல் மாடியிலுள்ள தனது அறையின் குளியலறையிலிருந்து திரும்பி படுக்கையை அடைந்தபோது மயங்கி விழுந்தார். அப்போது அவருடன் அங்கிருந்த சசிகலா மற்றும் மருத்துவர் கே.எஸ். சிவகுமார் ஆகியோர் அவரை தாங்கிப் பிடித்தனர்.

 

Jayalalitha case Arumugam Samy commission report

 

மருத்துவர் சிவகுமார் விரைந்து ஆம்புலன்ஸ் சேவைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு உடனடியாகத் தகவலளித்து ஆம்புலன்ஸில் வந்த மருத்துவர் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் உடனடியாக முதல்வருக்கு மாஸ்க் மூலம் ஆக்ஸிஜன் வழங்கி முதலுதவி அளித்தனர். பின் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு பின் ஐ.சி.யூ-க்கு மாற்றப்பட்டார். அப்போது அவர் ஸ்ட்ரெச்சரில் அழைத்து செல்லப்பட்டார், அப்போது அவருக்கு சுயநினைவு திரும்பியிருந்தது’ என்று தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்