தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (09-12-23) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிவாரணத் தொகையை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியவே இல்லை. வெள்ளம் வடிந்த பகுதிகளிலும் சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளன. மேலும், சாலைகளில் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகின்ற நிலைமை உருவாகியிருக்கின்றது. இந்த ஐந்து நாட்கள், மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து நிற்கின்றனர். மக்களின் இழப்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை. இந்த நேரத்தில் அவர்களுக்கு கை கொடுத்து உதவ வேண்டும் என்பது அரசின் கடமையாகும்.
அவர்களின் உடைமைகள், வாழ்வாதாரம் என அனைத்தும் போய்விட்டன. இதைக் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு நாம் பல்லாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால், அதைக் கூட பொருட்படுத்தாமல் அவர்களின் எதிர்பார்ப்புக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இன்றைக்கு தமிழக அரசு ரூ.6,000 கொடுத்திருக்கிறது என்றால் அதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, அந்த ரூ.6000 என்பதை ரூ.12,000 ஆக கொடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகின்றோம்” என்று கூறினார்.