நில அபகரிப்பு வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை துரைப்பாக்கத்தில் ரூபாய் 5 கோடி மதிப்பிலான நிலத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அபகரித்ததாகக் கூறி, மகேஷ்குமார் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, ஜெயக்குமார் மற்றும் அவரது மருமகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தை அவர் நாடினார். இந்த வழக்கு இன்று (11/03/2022) நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, "தனது மருமகனுக்கும், அவரது சகோதரருக்கும் இடையேயான வழக்கு ஆலந்தூர் சிவில் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதில் எவ்வித தொடர்பும் இல்லாத தான் கைது செய்யப்பட்டுள்ளேன்" என்று ஜெயக்குமார் தரப்பில் வாதிடப்பட்டது.
அதேசமயம், புகார்தாரர் தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திருச்சியில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்து கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
ஏற்கனவே, தி.மு.க. நிர்வாகியைத் தாக்கியது, சாலை மறியல் வழக்குகளில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. மூன்று வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததால் விரைவில் புழல் சிறையில் இருந்து வெளியே வருகிறார் ஜெயக்குமார்.