ஜாதிச் சான்றிதழ் வழங்க விரிவான சட்டத்தை தமிழக அரசு
இயற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டிய தருணம் :ஐகோர்ட்
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்குவது, சரிபார்ப்பது தொடர்பாக விரிவான சட்டத்தை தமிழக அரசு இயற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டிய தருணம் இது என சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம், தன் மகள், மகனுக்கு பழங்குடியினர் ஜாதி சான்று வழங்க மறுத்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேணுகோபால், நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்கள், ஜாதி சான்று வழங்குவது, சரிபார்ப்பது தொடர்பாக சட்டம் இயற்றியுள்ளன. அதை பின்பற்றி, தமிழக அரசும் சட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்க இதுவே தக்க தருணம்... இதன் மூலம் போலி சான்றுகளை களைய முடியும் என அரசுக்கு ஆலோசனை தெரிவித்தது.
மேலும் இரண்டு வாரங்களில் ஆட்சியருக்கு மீண்டும் மனு அளிக்கும்படி மனுதாரரருக்கும், அதை ஆறு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என ஆட்சியருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- சி.ஜீவா பாரதி