ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு 70 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த வாரம் ரத்து செய்து நாடாளுமன்றத்தில் அறிவிப்பை வெளியிட்டது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என அதிரடியாக மத்திய அரசு அறிவித்தது.
மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக, காஷ்மீர் மாநில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள், அவர்களின் குடும்பத்தினரை பாதுகாப்பு படையினர் கைது செய்தும், சில தலைவர்களை வீட்டுக்காவலில் வைத்தும் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்பத்தினரை சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைத்திருப்பதை ஏற்க இயலாது என்று தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில் "ஜம்மு-காஷ்மீரில் அரசியல் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்களை தடுத்து வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்கவும், அவர்களுக்கு எதிராக எந்தவிதமான தண்டனை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டாம் எனவும் மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்" என்று மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.