சேலம் கூலமேட்டில் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு விழா களைகட்டியது. சீறிப்பாய்ந்த காளைகளை, துணிச்சலுடன் மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள கூலமேட்டில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். மதுரை அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு சற்றும் குறையாத அளவுக்கு ஆத்தூர் கூலமேடு மற்றும் தம்மம்பட்டி பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டும் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற விழாவாகும்.
இதையடுத்து நடப்பாண்டு கூலமேட்டில் ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. அதன்படி, திங்கள்கிழமை (ஜன. 17) கூலமேட்டில் உள்ள அரசுப்பள்ளி மைதானத்தில் ஜல்லிக்கட்டு விழா நடந்தது.
சேலம், நாமக்கல், தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 650 காளைகள் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டன. மாடுபிடி வீரர்கள் 300 பேருக்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருந்தது. கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் முன்னதாக கரோனா பரிசோதனை பரிசோதனை செய்யப்பட்டது.
கால்நடைத்துறை சார்பில் காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டு காளைகளை திறந்து விடுவதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டது. வாடிவாசலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு விழா தொடங்கியது.
சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சரண்யா உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் சிவலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சம்பிரதாயப்படி, போட்டிக்கான காளைகளை திறந்து விடுவதற்கு முன்னதாக ஊர் கோயில் காளையை வாடிவாசலில் திறந்து விட்டனர். இதையடுத்து முதல் சுற்றில் 100 காளைகள் ஒவ்வொன்றாக திறந்து விடப்பட்டன.
பருத்த திமிலுடனும், கூரிய கொம்புகளுடனும் காளைகள் சீறிப்பாய்ந்தன. மாடுபிடி வீரர்களும் பாய்ந்து வரும் காளைகளை அச்சமின்றி, திமில் மீது பாய்ந்து பிடித்து அடக்கினர். இந்த விழாவில் காளைகள் முட்டியதில் சில வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளும் சுகாதாரத்துறை சார்பில் செய்யப்பட்டிருந்தன.
சேலம் மாவட்ட காவல்துறை எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் மேற்பார்வையில் ஆத்தூர் காவல்துறை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் 300- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பந்தோபஸ்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
இதுகுறித்து கூலமேடு ஜல்லிக்கட்டு விழாக்குழு நிர்வாகிகள் கூறியது, ''சேலத்தில் பிரசித்தி பெற்ற கூலமேடு ஜல்லிக்கட்டு விழா 55- வது ஆண்டாக நடந்தது. அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி விழா ஏற்பாடுகள் செய்திருந்தோம். பல மாவட்டங்களில் இருந்து காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும், வாகை சூடும் காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பரிசுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. எனினும், காளை உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் பரிசுகளை எதிர்பாராமல் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்,'' என்றனர்.