திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழாவானது இன்று காலை கோலாகலத்துடன் தொடங்கியது.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு விழாக் குழு சார்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் அனுமதி கோரி இருந்த நிலையில், நேற்று மாலை வரை அனுமதி பெறப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று காலை மாவட்ட ஆட்சியரும், காவல் துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து காலை 8 மணிக்கு துவங்க வேண்டிய ஜல்லிக்கட்டு போட்டியானது 10:30 மணிக்கு கால தாமதத்துடன் துவங்கியது.
5-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை மணிகண்டம் ஒன்றிய பெருந்தலைவர் மாத்தூர் கருப்பையா துவக்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போட்டியில் 400 மாடுகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி என்று மாவட்ட நிர்வாகம் அறிவுருத்தியிருந்த நிலையில், விழாக்குழு அதிகப்படியான மாடுகளுக்கு நேற்று டோக்கன் வழங்கியதால் மாவட்ட நிர்வாகம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி 300 மாடுகள் மட்டுமே அனுமதிக்கபட்டன. மேலும் இப்போட்டியில் கலந்து கொள்ள வந்த 400 வீரர்களில் 150 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களும் சுழற்சி முறையில் அனுமதிக்கப்பட்டனர்.