தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு இரு வருடங்களுக்கு முன்பு நீதிமன்றம் மூலம் தடை ஏற்பட தமிழகமே கொந்தளித்தது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை தமிழக வீதிகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தன்னெழுச்சியான இளைஞர்களின் போர் சென்னை மெரினாவில் புரட்சியாக வெடித்தது. அதன் பிறகு தடை தகர்ந்தது.
இதற்கு முன்னர் வரை தமிழகத்தில் சில ஊர்களில் மட்டுமே நடந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு தடையை உடைத்த புரட்சிக்குப் பிறகு ஒவ்வொரு ஊரிலும் களமாட தொடங்கியது. அப்படித்தான் சென்ற ஆண்டு முதல் முறையாக ஈரோட்டில் நடைபெற்றது. தொடர்ந்து இந்த ஆண்டும் வெகு சிறப்பாக நடக்கவுள்ளது.
ஈரோடு பவளத்தாம்பாளையத்தில் உள்ள ஏ.இ.டி என்ற பள்ளி மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பிறகு அவர் நிருபர்களிடம், "ஈரோட்டில் சென்ற முறை சிறப்பான முறையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. அதைப் போன்று இந்த முறையும் இரண்டாவது முறையாக மிகவும் சிறப்பாக வருகிற 18ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது இதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த முறை கூடுதல் பாதுகாப்புடன் போட்டியை கண்டு களிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த முறை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ் உலகமே வியந்து பார்க்கும் வகையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 200 காளைகளுக்கு மேல் போட்டியில் பங்கேற்கும்." என்றார்.
ஈரோடு கலெக்டர் கதிரவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், வர்த்தகர் அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், எம்எல்ஏக்கள் கேவி ராமலிங்கம் கே எஸ் தென்னரசு சிவசுப்பிரமணி ஆகியோர் உடனிருந்தனர்.